Featured Articles
All Stories

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

இளையராஜாவைக் குறி வைத்திருக்கும் கனெடிய விடுதலைப்புலிகள்


வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
சம்பவம்
இசைத்துறையில் இன மொழி பேறுபாடின்றி அனைவராலும் ரசிக்கப்படுபவர்களில் இளையராஜாவும் மிக முக்கியமானவர். அப்படிப்பட்ட இசைஞானியை கனடிய தேசத்தை பிரதானமாகக் கொண்டியங்கும் TRINITY என்ற பொறியியல் நிறுவனம் கனடாவின் மிகப்பெரும் அரங்கங்களில் ஒன்றான rogers centre ல் பெரிய செலவீட்டுடனும் மிகப் பெரும் பண வசூலுடனும் நிகழ்ச்சிக்காக அழைத்திருக்கின்றது. இவரோடு திரையுலகின் மிகப் பெரும் பாடகர்களும் பங்கேற்க உள்ளார்கள்.
மேலே இடைவெளியில் உள்ள பாடகர் யாரென்று கணிக்க முடிகிறதா? முடியாவிடில்  எனது தனிமடலுக்கு வாருங்கள்.
வழமையாக இப்படியான நிகழ்ச்சிகள் நடக்கும் போது சிலர் தாமாகவே ஈழப் போராட்டத்துக்காகவும் கொஞ்ச நிதியை ஒதுக்குவார்கள். அல்லாவிடில் குறிப்பிட்ட குழுவொன்றால் இதற்கான பணம் வசூலிக்கப்பட்டு ஈழத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆனால் 2009 ற்குப் பிறகு இந்த நிலமை தலைகீழக மாறியதுடன் பலர் சுயலாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு நிகழ்ச்சிகளை நடாத்த ஆரம்பித்தனர். ஆனால் இப்போதும் சிலர் இதிலிருந்து ஒரு பகுதியை ஈழ மக்களின் மேம்பாட்டிற்காக ஏதாவது அமைப்பூடாகவோ அல்லது தன்னிச்சையாகவோ ஒரு தொகைப் பணத்தை வழங்கி வந்திருக்கின்றனர்.
இச் செயற்பாட்டினால் ஈழத்தை சாக்காக வைத்து பண வசூலிப்பில் ஈடுபட்டு வந்தவர்களின் பிழைப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதே ஆதிக்கம் தான் இந்நிகழ்வில் மூக்கை நுழைத்திருக்கின்றது.
ஆனால் நேற்றைய தினம் நான் முகநூலில் பகிர்ந்திருந்த மடலானது ஒரு பெரியவரால் உருவாக்கப்பட்டிருந்தாலும் அம்மடலை சில விசமிகளே மின்னஞ்சல் ஊடாக விநியோகித்து வருவது மட்டுமல்லாமல் அந்நிகழ்ச்சிக்கெதிராக பல வழிகளில் சதி வலைகளைப் பின்னியும் வருகிறார்கள்.
அந்நிறுவனத்தைச் சார்ந்த ஒரு பிரமுகருடன் தொடர்பை ஏற்படுத்திய போது அறிய முடிந்த விடயங்கள் இவை தான்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி வரும் கனெடியக் குழு ஒன்று இவர்களிடம் பண வசூலிப்பிற்காக அணுகியிருக்கின்றது. ஆனால் இந்நேரம் உங்கள் அமைப்பிற்கு கொடுக்க வேண்டிய தேவை இல்லை. என உறுதியாக கூறிய பின்னர் பல வழிகளில் முயன்றும் முடியாத நிலையில் பல்வேறு வகையில் கனடிய மக்களிடையே பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இறுதியாக இவர்கள் எடுத்துள்ள ஆயுதம் என்னவென்றால் நிகழ்வு நடைபெறும் கார்த்திகை மாதமானது மாவீரர் நாள் அனுஷ்டிக்கும் மாதம் என்பதால் இம்மாதம நிகழ்த்தக் கூடாது என நேரடியான அழுத்தத்தையும் பிரச்சாரத்தையும் வழங்கி வருகிறார்கள்.
முன்னணி வரிசைக்கான ரிக்கட்டுக்கள் அனைத்தும் விற்கப்பட்டதன் பின்னர் இந்தப் பரப்புரை எடுபடுமா என்ற கேள்விகளுக்கு அந்நாட்டு ரசிகர்களே முடிவெடுக்க வேண்டும்.
பிற்சேர்க்கை
ஒரு முதியவர் எழுதிய மடல் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். உண்மையில் அவர் உணர்வையும் ஈழமக்களுக்கான ஆர்வத்தையும் வரவேற்கிறேன். இருந்தாலும் ஐயா இளையராஜாவிடம் நாம் எமக்கு உதவி செய் என்று கேட்பதில் எந்த வகையில் நியாயம். எத்தனை ஈழத்தவரே தம் மக்களை மறந்து போய் வாழ்கையில் நல்ல வசதியாக வாழ்கையில் அவரிடம் இரப்பது எமக்கான தன்மானக்கேடாகவே என்னால் உணர முடிகிறது என்பதை இச்சிறியவன் தன் உணர்வுக்கெட்டிய வகையில் கூறிக் கொள்கிறேன்.

நன்றியுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
(இப்பதிவை இணையத்தளங்கள் பயன்படுத்த விரும்பின் பயன்படுத்தலாம். ஆனால் சின்ன வேண்டுகொள் mathisutha56@gmail.com என்ற முகவரிக்கு தங்கள் பதிவுத் தொடுப்பைத் தெரியப்படுத்தி உதவவும்)
முற்பகல் 12:01 - By ம.தி.சுதா 6

6 கருத்துகள்:

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

யாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்


வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
நேரடியாக தலைப்பிற்குள்ளேயே நுழைவோமா ?
இன்று இணைய உலகில் வருமான நோக்கத்துடனும், பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கப்படும் இணையத்தளங்களிலிருந்து போலி முகநூல் கணக்கு வரை பெரும்பாலானவை யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியே ஆரம்பிக்கப்படுகின்றன என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய உண்மையாகும். இது பற்றி நண்பர் ஒருவர் அண்மையில் விபரமாகவே ஒரு பதிவு போட்டிருந்தார்.
இப்படி மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டதில் ஒரே ஒரு இணையத்தளம் தான் பலராலும் மிக மிக கேவலமாக நோக்கப்படுவது இணைய உலகமே அறிந்த உண்மையாகும்.
அண்மையில் இத்தளத்தில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கழகம் ஒன்றின் நடன நிகழ்வில் இடம்பெற்ற காட்சி ஒன்றை காணொளியாகப் பிரசுரித்ததுமில்லாமல் யாழின் காலாச்சாரச் சீரழிவாக விபரணப்படுத்தியும் இருந்தார்கள். இப்படியான செய்திகள் பற்றி அந்த new Jaffna தள நிர்வாகியான சந்திரதேவன் பிரசாத்திடம் முன்னரும் கதைத்த போது அவர் சொன்னது தன் நண்பர்கள் தான் இப்படியான செய்திகளைப் போட்டார்கள் என்கிறார்.
யார் அவர்கள் என விசாரித்துக் கொண்டு போனால் பலர் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தான் மிக மிக கசப்பாக இருந்தது. தாம் குடித்து விட்டு அடிக்கும் கும்மாளங்களை இது வரை எந்தவொரு பல்கலைக்கழக மாணவனாவது வெளியே சொல்லியிருப்பானா? என்ற கேள்விக்கு நான் இணையத் தேடலில் பதில் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அவரை பற்றிய பேச்சு ஒரு புறம் இருக்கட்டும் அந்த காணோளி பற்றிய விடயத்திற்குள் வருவோம்.
அதில் ஜீன்ஸ்- ரீ சேர்ட் அணிந்த ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் மேற்கத்தைய நடனத்தை ஆடுகிறார்கள். நடனம் கூட ஆபாச அசைவுகளைக் கொண்டிருக்கவில்லை. சரி உடலை பார்த்தோமானால் அப்பெண்ணின் இடுப்பில் ஒரு நூல் கூட வெளியே தெரியவில்லை.
இதில் எங்கே ஆபாசம் இருக்கிறது, சரி கலாச்சாரம் சீரழிகிறது என்ற ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். சரி அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் குற்றச்சாட்டை வைக்கும் ஒவ்வொருவரும் உங்கள் ஜட்டிகளை கழைந்து எறிந்து விட்டு கோவணத்துடன் வந்து நின்று சொல்லுங்கள் அதன் பின்னர் தான் உங்களுக்கு கலாச்சாரம் பற்றிக் கதைக்க தகுதியிருக்கிறது என்று ஏற்றுக் கொள்வேன்.
இதை ஆபாசமென்றால் 1980 ம் ஆண்டு காலப்பகுதிவரை யாழ்ப்பாணத்து ஆலயங்களில் சின்னமேளம் என்று ஒரு நடனக் குழுவை பிடிப்பார்கள். அதில் சில நடனக் குழுக்கள் மூடிப் போர்த்துக் கொண்டு ஆடினாலும் சில் குழுக்களில் இடை தெரியும் படியான உடையலங்காரத்துடனே தான் ஆடுவார்கள்.
அவர்களின் இடுப்பில் காசு செருகிய இளம் பையன்கள் இப்போதும் பல் விழுந்த கிழவராக எம் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அப்போது எங்கே போய் விட்டது உங்கள் கலாச்சாரமெல்லாம்.
இந்த காணொளியை ஒரு பல்கலைக்கழகத்தில் உயர் பதவி வகிக்கும் ஒருவரும் தன் முகநூலில் பகிர்ந்து அத்தளம் செய்தது சரி போலவே சுட்டிக் காட்டியிருந்தார். முதலில் எம்மவர்கள் எதைக் கலாச்சாரம் எதை நாகரீகம் என வரையறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பொதுவாகவே எம் சமூகத்தில் ஒரு கோட்பாடு இருக்கிறது. தாம் ஏதாவது மேற்கத்தைய உலகத்திற்கு மாறிக் கொண்டால் அது நாகரீகம் என்ற முத்திரையை குத்தி விட்டது மற்றையதெல்லாவற்றையும் தப்பான நோக்கத்துடனே நோக்குவார்கள்.
முதலில் படித்த சமூகமே இவற்றுக்குத் துணை போவது தான் வருந்தத்தக்க விடயம்.
தேச, மொழிப் பற்றாளர்களிடம் ஒரே ஒரு கேள்வி….. எம் ஈழத்தின் மானத்தை உலகுக்கு விற்கும் இத் தளத்தை புறக்கணிக்க எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள்…. எப்போது இந்த விடுப்புகளுக்காக ஒட்டி நின்று பார்ப்பதும், அநியாய வதந்திகளுக்கு அதை பரப்ப உதவியாக நின்று துணை போவதையும் தமிழன் கை விடுகிறானோ அன்று தான் எம் இனம் உருப்படும்….
இதையாவது ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து கொள்ளுங்கள்..
குறிப்பு – இனி நான் குறிப்பிடுவதை விளம்பரமாக நீங்கள் குறிப்பிட்டாலும் எனக்கு கவலையில்லை ஆனால் இச் செய்தியை பகிர்வதன் மூலமும் எம் இழக்கப்பட்ட மானத்தை கொஞ்சமாவது மீள நிருபித்துக் கொள்ளலாம்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
பிற்பகல் 1:04 - By ம.தி.சுதா 15

15 கருத்துகள்:

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

ரசிகரை ஏமாளியாக்கும் சினிமாத்துறையின் புதிய விளம்பரங்கள்


வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
வாருங்கள் ஆக்கத்திற்குள்
எந்த ஒரு தொழில்துறைக்கும் விளம்பரம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். அதற்கு பணம் செலவு செய்வதில் எந்த நிறுவனமம் பின் நிற்கக் கூடாது. ஆனால் சில நிறுவனங்கள் தந்திரமான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் தப்பித்துக் கொள்ளும்.
அந்தவகையில் சினிமாத்துறையில் தற்போதைய பாணி ஒன்று முளைத்திருக்கிறது. இது நடிகர் விஜய் இன் துப்பாக்கியில் தான் பரவலாக ஆரம்பித்திருந்தாலும் அதன் வழக்கின் போக்கும் அப்பிரச்சனையை ஓரளவு நம்ப வைத்திருக்கிறது. கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் முன்னர் ஒருவர் பதிவு செய்து வைத்திருந்தது முருகதாஸ் அப்பெயரை வைத்துத் தொலைக்க 7 தடவை அவ் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதன் பின்னர் இது விஸ்வரூபம் எடுத்துச் செல்கிறது. நேற்று முன்தினம் சிம்புவின் வாலு படத் தலைப்பிற்கு சர்ச்சை உருவானது. இன்று சசிக்குமாரின் “சுந்தரபாண்டியன்” படத்தின் தலைப்பிற்கு சர்ச்சை தோன்றியுள்ளது.
இன்று முகநூலில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தேன் அதாவது இந்த “காதல்” என்ற தலைப்பில் முதல் முதல் படம் எடுத்தவர் எங்கே போய்விட்டார். அவர் இருந்திருந்தால் இன்று எத்தனை படங்கள் நீதிமன்றப்படிகளில் ஏறி நிற்க வேண்டி வந்திருக்கும்.
தலைப்பில் தவறான விளம்பர வழிமுறை எனக் கூறப்பட்டிருந்தாலும் இத் தவறுக்கு தலைப்புகளை பதிவிடும் சங்கமே பெரிதும் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் சாதாரணமாக ஒரு கடையுடையதோ அல்லது நிறுவனத்துடையதோ பெயரை பதிவு செய்ய வேண்டுமானால் பதிவுத் திணைக்களத்தின் இணையத்திலேயே அதனை பரிசோதித்துக் கொண்டு பெயரை தெரிவு செய்யலாம்.
ஆனால் இவர்களிடம் அப்படி இணைய வசதி இல்லாமல் இருக்கலாம். அப்படியானால் ஒருவர் புதுப்பட அறிவிப்பை விட்டால் அதன் தலைப்பை பகிரங்க அறிவித்தலில் விட வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் இத்தலைப்பிற்கு யாராவது ஆட்சேபனை தெரிவிக்காவிடில் அதன் பின்னர் கூறப்படும் எந்த மாற்றுக் கருத்தும் செல்லுபடியாகது என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.
குறிப்பிட்ட ஒரு வாரத்திற்குள்ளேயே இந்தளவு தலைப்புப் பிரச்சனை என்றால் இன்னும் எத்தனை தலைப்புக்களுக்கு இப்படி பிரச்சனை வரப் போகிறது என எந்த ரசிகனாலும் விளங்கிக் கொள்ள முடியாமல் போவதுடன். வரப் போகும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ரசிகர்களைக் கொண்டே இலவச விளம்பரத்தை மேற்கொள்ள பல பட நிறுவனங்களுக்கு ஏதுவாக அமையும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

வன்னியின் இயற்கை எழிலை தொகுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள பக்கத்திற்கச் செல்வதற்கான தொடுப்பு கீழேமுகநூல் பக்கத்திற்கான தொடுப்பு
பிற்பகல் 10:22 - By ம.தி.சுதா 12

12 கருத்துகள்:

சனி, 8 செப்டம்பர், 2012

போருக்கு பின்னரான வன்னியின் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகள்

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?

வழமையாகவே அழகான காட்சி ஒன்றைக் கண்டால் அதை கமராவுக்குள் உள்ளடக்கி விட மனம் துடிப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அது moble camera விலிருந்து proffosional camera வரை தொடர்கிறது.

எனது இளமைக்காலங்களில் (இப்ப ஒன்றும் கிழவனில்லிங்கோ.... பாடசாலைக்காலத்தைச் சொன்னனேன்) வன்னியின் இரு எல்லைகளுக்கும் சைக்கிளில் அலைந்த காலத்தை என்றைக்குமே மறக்க முடியாது. அதற்கு காரணம் எல்லாம் எமது கிரிக்கேட் காய்ச்சல தான் என்றால் பலர் சிரிப்பீர்கள். ஆனால் அப்போது எந்த கமராவும் இல்லை. அதனால் பல காட்சிகளை இழந்தது உண்மையே.

ஆனால் இன்று அப்படியல்ல... வன்னியின் அனைத்து இயற்கை வளங்களையும் பார்க்கையில் அதன் அழகை வர்ணிப்பது என்பது மிகவும் இன்பமானதே. என்னால் முடிந்த அளவுக்கு என்னுடையதும் என் மைத்துனருடையதும் கைப்பேசியில் பெறப்பட்ட படங்களை தங்களுடன் பகிர்வதற்காகவே ஒரு முகநூல் பக்கம் ஒன்றை திறந்திருக்கிறேன். அதன் தொகுப்புக்களை காண்பதற்கு இங்கே சொடுக்கி இணைந்து கொள்ளலாம்.
பல இணையத்தளங்கள் அங்குள்ள படங்களை அப்படியே பகிர்ந்ததற்கு நன்றிகள்.
ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள். அந்த பக்கத்தின் தொடுப்பையும் தங்கள் தளத்துடன் இணைத்து அப்பக்கத்தை அறிமுகப்படுத்திவிடுங்கள்.
பகுதி - 1 ஐ இங்கே தொகுத்துள்ளேன். படங்களின் மேல் சொடுக்குவதன் முலம் படத்தை பெரிதாக்கி பார்க்கலாம்.

முகநூல் பக்கத்திற்கான தொடுப்பு

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
பிற்பகல் 6:59 - By ம.தி.சுதா 8

8 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top