Featured Articles
All Stories

Wednesday, 28 August 2013

துலைக்கோ போறியள் குறும்படம் உங்கள் பார்வைக்கும் விமர்சனங்களுக்குமாக..


வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
என் குறும்படக் கனவுக்கு தீனி போடுவதற்காக இருக்கும் வளங்கள் பொருளாதாரா வசதிகளைக் கொண்டு என்னால் இயன்ற அளவுக்கு இப்படைப்பை படைத்திருக்கிறேன்.
இது சம்மந்தமான வெளிப்படையான கருத்துக்களையும் விமர்சனங்களையும் தங்களிடம் எதிர் பார்ப்பதற்காகவே இப்படைப்பை துணிந்து வெளிக் கொணர்கிறேன்.
இன்னுமொரு படைப்பை படைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவை எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இப்படைப்பை படைப்பதற்காக என்னோடு எந்தவித எதிர் பார்ப்புமின்றி உழைத்தவர்கள் தொடர்பாக முன்னோட்ட வெளியீட்டுப் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன் (பதிவுக்கான தொடுப்பு இங்கே)

சில தனிப்பட்ட சிக்கல்கள் காரணமாக இக்குறும்படத்தை குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளிக்கொணர முடியாமல் போனமைக்காக சிரம் தாழ்ந்து அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.


என சிலவற்றை பூரண திரைக்கதையுடன் கைவசம் வைத்திருந்தாலும் காலம் நேரம் அதற்கான பொருளாதார வசதி கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரு படைப்புடன் சந்திக்கிறேன்.
குறிப்பு - படைப்புகளுக்காக இணைய விரும்புவோர் இணைந்து கொள்ளலாம். அத்துடன் மேற்குறிப்பிட்ட திரைக்கதை தேவைப்படுபவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

குறும்படத்திற்கான தொடுப்பு இது தான்
http://www.youtube.com/watch?v=ocIKF_H1q_E&feature=player_embedded

படம் இதோ

9 comments:

Monday, 26 August 2013

யாழ் கொழும்பு வழி பயணத்திற்கான வாகன வசதிகளின் ஒரு ஒப்பீடு

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

இலங்கையின் இரு வேறு அந்தங்களில் காணப்படும் பகுதியாக இருந்தாலும் இரு கண்டங்களை அடைவது போன்ற மன நிலைப்பாட்டைக் கொடுத்திருந்த யாழ் கொழுப்பு பிரயாணமானது சுமூக நிலைக்கு வந்ததன் பிற்பாடு பல்வேறு வகையான போக்குவரத்து மார்க்கங்கள் வந்த பின்னரும் சராசரி மக்களின் மார்க்கமாக இருப்பவை ஏசி பொருத்திய சொகுசு பேருந்து, இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, ஹையெஸ் வாகனம் என்பனவாகும்.

இதில் குறிப்பிட்ட மூன்றிலும் பயணித்தவன் என்ற ரீதியில்  பொதுவான ஒப்பீட்டை வரைகிறேன் (இங்கு குறிப்பிடப்படும் பெரும்பாலான ஒப்பீடுகள் வடமராட்சி கொழும்புக்கானது).
செலவு குறைந்த சிக்கனப் பயணத்திற்கு நாங்க பாவிக்கும் வழிமுறை ஒன்றிருக்கிறது பதிவின் இறுதியில் படியுங்கள்.

சொகுசுப் பேருந்து
சராசரியாக 1250 ரூபாவிலிருந்து 1400 ரூபாய் வரை அறவிடப்படும் இச்சேவையில் கிடைக்கும் பெரிய அனுகூலம் அலுவலக நாள் அன்று காலை கொழும்பு போய்ச் சேர்ந்தாலும் ஏதோ படுக்கையில் இருந்து எழுந்து போகும் மனநிலையே இருக்கும்.
ஆனால் பலருக்கு இருக்கும் பிரச்சனை கிட்டத்தட்ட அரை நாட்களை தின்று விடும் என்பதேயாகும். யாழ்ப்பாணம் பட்டணப்பகுதியில் இருந்து இரவு 7.30 ற்கு வெளிக்கிடுபவருக்கு அதன் பாதிப்பு தெரிவதில்லையானாலும் வடமராட்சி போன்ற இடங்களில் இருந்து 5 அல்லது 5.30 ற்கு வெளிக்கிடுபவர் நிலை தான் கவலைக்கிடமானதாகும். ஆனால் முடிவிடத்துடன் கூட்டிக் கழித்துப் பார்க்கையில் காலை சரியான நேரத்திற்கு நீங்கள் சேர வேண்டிய இடத்தை அடைந்திருப்பீர்கள்.
அனால் இதிலும் CTB (SLTB) பேருந்துகளிலும் இருக்கும் உணவுப்பிரச்சனை ஒன்றிருக்கிறது. ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் எந்தக்கடையில் சரியான சலுகையும் உபசரிப்பும் கிடைக்கிறதோ அங்கேயே பேருந்துகள் நிறுத்தப்படும்.

நொச்சிகாமத்தில் உள்ள ஒரு கடையில் நின்றால் ஓட்டுனரின் முன்பக்கக் கண்ணாடியைக் கூட துடைத்து விடுவார்கள். அதே போல இன்னொரு இடத்தில் (பெயர் குறிப்பிடவில்லை) உள்ள முஸ்லீம் கடை ஒன்றில் நிறுத்தும் பேருந்துகளுக்கு பொலிஸ் தரப்பிலிருந்து ஏதாவது சிக்கல் வந்தால் (வேக கட்டுப்பாட்டை மீறல் தொடர்பான) அவர்களே சுமூகமாககி வைப்பார்கள்.

CTB (SLTB) பேருந்து
இங்கே குறிப்பிடப்படுவது சாதாரண பேருந்து பற்றியதாகும். ஆனால் உள்ளுரில் ஓடும் சாதாரண பேருந்துகள் ஓடப்படுவதில்லை எல்லா இருக்கைகளும் தலை சாய்கக் கூடியவையே (இருக்கைகள் நகர்த்த முடியாது) அத்துடன் தொலைக்காட்சியும் இருக்கிறது. 675 ரூபா வுடன் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் பயணமானது காலை 3.30 ற்கு கொழும்பில் முடிவடையும் அதே போல காலை 5.30 ற்கு ஆரம்பிக்கும் பயணமும் மாலை 3.30 ற்கு கொழும்பில் முடிவடையும்.
இரு இருக்கைகள் உள்ள பக்கம் உங்களால் முற்பதிவு செய்ய முடிந்தால் பெரிய உடல் அசதியிருக்கப் போவதில்லை.
இங்குள்ள சிக்கல் என்னவென்றால் அதிகாலை 3.30 ற்கு கொழும்பு வீதிகளில் ஒரு பெண்ணால் நிற்க முடியாது என்பதேயாகும். உங்களுக்கான வாடிக்கையான ஒரு ஆட்டோக்காரர் இருப்பாரானால் எந்த சிக்கலுமில்லை.
சிலதடவை நான் இரவு கொழும்பு போய் எனது வேலையை முடித்துக் கொண்டு காலை பேருந்தில் திரும்பியிருக்கிறேன் (24 மணி நேரத்திற்குள்).

ஹையெஸ் வாகனம்
சராசரியாக 1200  ரூபாய் அறவீட்டுடன் ஆரம்பிக்கும் இப்பயணத்தில் உள்ள மிகப் பெரும் சாதகமான விடயம் என்னவென்றால் வீட்டு வாசலில் ஏற்றப்பட்டு நாம் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கப்படுவோம். இதைப் போல பாதுகாப்பான பயணம் எதிலும் கிடைப்பதில்லை. ஆனால் மற்றையதில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து தப்புவதற்கு கிடைக்கும் சந்தர்ப்ப விகிதம் இதில் மிக மிகக் குறைவு.
அத்துடன் என் போல சற்று கால் நீளமானவருக்கு ஏதுவான இருக்கை கிடைக்காவிடில் விடிய இறங்கும் போது தேநீர் குடிப்பதற்கு இரண்டு சிரட்டைகள் கையில் இருக்கும்.
ஆனால் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனை உள்ளவருக்கு சிறந்ததாகும் (super luxary சொகுசுப் பேருந்துகளுக்கு கட்டாயம் கழிப்பறை இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது)
அதே போல நல்ல கடைகளில் சாப்பிடலாம்.

இதை விட தனியார் அரைச் சொகுசு பேருந்துகளும் போகின்றன அவை பற்றி நான் விபரித்துத் தான் நீங்கள் அறிய வேண்டுமென்பதில்லை.

சரி நாம் பாவிக்கும் சிக்கன வழி இது தான். தயவு செய்து பேருந்து முதலாளியிடம் போட்டுக் கொடுத்திட வேண்டாம். பிற்பகல் 5 மணிக்கு வவுனியா பஸ் எடுத்திடவேண்டும். அங்கே 9 அல்லது 9.30 மணியளவில் யாழ்ப்பாணத்து சொகுசுப் பேருந்துகள் வரும். அதற்கு முன்னர் நல்ல கடையில் சாப்பிட்டு விட்டு 10 ரூபாயை வவுனியா பஸ்நிலைய கழிப்பறைக்கு கொடுத்து மதியப் பாரத்தை இறக்கி வைத்து விட்டு நின்றால் பேருந்துகள் வரும். நடத்துனரிடம் சென்று “அண்ணே ஏதாவது சீட் இருக்கா“ என்று கேட்டால் அவர் பதிலளிப்பார் இருந்தால் 500 அல்லது 600 ஐ அவரிடம் கொடுத்து விட்டு அலுப்பற்ற சந்தோசப்பயணத்தை ஆரம்பிக்க வேண்டியது தான். 400 கொடுத்து பயணிக்கும் என் நண்பர் ஒருவரும் இருக்கிறாரென்றால் பாருங்களேன். இப்ப சொல்லுங்கள் நாம் பழம் தின்று கொட்டை போட்டவரா இல்லையா?

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

4 comments:

Thursday, 15 August 2013

இந்திய ஈழ உணர்வாளருக்கு ஈழத்தில் இருந்து ஒரு விழிப்புணர்வு மடல்

முற்குறிப்பு - இம்மடலானது எந்தவொரு உணர்வாளர் மனதையோ புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. நிகழ்கால களத்தில் இல்லாமையால் தங்களால் உணர முடியாமல் போன சில யதார்த்தங்களை உணர வைப்பதற்காகவே... முக்கியமாக இத்தீர்மானத்துக்கு காரணமாக இருந்த சகோதரன் திருமுருகன் காந்தியின் பார்வைக்காகவே இம்மடல் வரையப்படுகிறது.

வணக்கம் சகோதரம்
சேமம் எப்படி?
தங்களின் ஈழ உணர்வு பற்றி மிக மிக தெள்ளத் தெளிவாக அறிந்தவன் நான். ஆனால் தாங்கள் எடுத்திருக்கும் இம் முடிவில் உடன்பாடில்லாததால் இம்மடலை வரைகிறேன். தனியாக வரைய வேண்டிய மடலை பகிரங்கமாக வரைவதாக நீங்கள் தப்பாக நினைக்க வேண்டாம். இங்குள்ள விடயங்களை படித்த பின்னர் நீங்களே யோசிப்பீர்கள் இது பலர் அறிய வேண்டியது தான் என்பதை...

முதலில் வடமாகாணசபைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். புறக்கணிப்பதற்கான காரணமாக உலகநாடுகள் மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது என காரணம் பயிலப்பட்டிருக்கிறது.
இங்கு என்ன நடக்கிறது என்பதை தேர்தலால் தான் உலக நாடுகள் அறிய வேண்டுமென்பதில்லை. அந்தளவு விஸ்திரணப்படுத்தப்பட்ட புலனாய்வுகள் முழு நாட்டிடமும் இருக்கிறது. சில வேளை புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத்தவரை உள்நாட்டுக்கு விடுமுறைக்காலத்தில் வர வைப்பதற்கான ஒரு நிழல் திரையாக இது அமையலாம் என்றால் நிச்சயம் நானும் ஏற்றுக் கொள்வேன்.
ஈழத்தமிழராகிய நாம் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணித்ததால் தான் இன்று பூண்டோடு அழிக்கப்பட்டு நிற்கிறோம் என்பதை மறந்துவிட்டீர்களா?
இதையும் புறக்கணிப்பதால் பிச்சைக்காரராகத் தான் திரிவோம் என்பது மிக மிக திடமாக அடித்துக் கூறிக் கொள்வேன்.
உதாரணத்துக்கு மற்றவரை எடுக்காமல் என்னையே எடுத்துக் கொள்கிறேன்... வன்னியால் மீண்டபின் இந்திய வீட்டுத் திட்டத்திற்கு எமது பெயரையும் பரிந்துரைத்தார்கள் அதை நேரே வந்து பார்த்து எமக்கு புனரமைப்புக்கு பணம் வழங்குவதாக உறுதிப்படுத்திப் போனார்கள். 3 வருடமாக அந்தப் பேச்சே இல்லை. இது தொடர வேண்டுமா?

இலங்கையில் தமிழருக்கு என்று இருக்கும் ஒரே பிரதிநிதித்துவம் தமிழ்க் கூட்டமைப்பென்ற ஒரு கட்சி தான்.. அதற்கு வாக்களிக்காவிட்டால் வடக்கின் ஆளுநராக சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் இது எந்தளவு பாரதூரமானது என்பது நான் சொல்லியா உங்களுக்கு விளங்க வேண்டும்.

13 வது திருத்தச்சட்டம் பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள்... நான் அரசியல் ஞானத்தில் பழுத்தவன் இல்லை. ஆனால் நிகழ்காலத்தில் எது சிறந்தது என வகைப்பிரிக்கத் தெரிந்தவன்... அந்தச் சட்டத்தில் உளள விபரணங்கள் யாருக்காவது முழுமையாகத் தெரியுமா?
உதாரணத்திற்கு அதில் தனிப் பொலிஸ்படை அமைப்பதற்கான அதிகாரம் மற்றும் காணி தொடர்பான அனைத்துச் சட்டங்களும் வழங்கப்படுவதாக இருக்கிறது.
இன்றைய நிலையில் அதை புறக்கணித்தது எந்தளவு தவறானது என்பதை எத்தனை பேர் ஒத்துக் கொள்கிறார்கள். உண்மையில் அதை குழப்புவதற்கு முனைப்பாக இருந்தது அரசாங்மே காரணம் அது வழங்கப்பட்டால் உள்ளுர் புரட்சி மூலம் நாங்கள் தமிழீழத்தை அடைந்து விடுவோம் என்பது அவர்களுக்கு அப்போதே விளங்கிவிட்டது. அது பற்ற சிந்திக்காமல் போனது எம் தவறு தானே...

தயவு செய்து யதார்த்தங்களை விளங்கிக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தில் தற்போது நடுத்தர மக்களால் வாழ்க்கையை நகர்த்த முடியாத நிலையே காணப்படுகிறது. கொள்கைகள் கொள்கைகள் என்றும் நடை முறை வாழ்க்கையை நாமே இழக்க போகிறோம்.

இதைப் படிக்கும் சிலர் என்னை அரசாங்க ஆள் என்றொ அல்லது தேசத் துரோகி என்றோ பட்டமளிப்பு விழா நடத்தலாம் எனக்கு அதில் எள்ளளவும் கவலை இல்லை ஆனால் இன்னும் ஒரு போரை இங்கே உருவாக்க வேண்டாம் என்பதே என் ஆசை

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா


14 comments:

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top