Featured Articles
All Stories

Friday, 28 June 2013

என் 200 வது பதிவும் குறும்பட விபரங்களும் (THULAIKKO PORIYAL TRAILER)

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

முற்குறிப்பு- இக்குறும்படமானது எனக்குள் இருந்த குறும்படக் கனவுக்கு தீனி போடுவதற்காக உருவாக்கப்படுவதே தவிர இது எனது தொழில் முறை ரீதியான முயற்சியல்ல என்பதை கூற விரும்புகின்றேன். இதற்குப் பிறகும் எனது படைப்புக்கள் வருமா என்பது என் தொழில் தான் தீர்மானிக்கும்.


எப்போதுமே முதல் முயற்சிகள எல்லோருக்கும் வெற்றியளிப்பதில்லை ஆனால் அம் முயற்சி மீதிருக்கும் தீவிரம் அதை கைவிடாமல் வைத்திருந்தால் என்றோ ஒரு நாள் ஆரம்பத்தில் இருந்த அதே உற்சாகத்துடன் அவ் இலக்கை அடைய உதவும் அந்த வகையில் எனக்குள் இருந்த ஆர்வத்திற்கு எனது மைத்துனர் ரஜிகரன் கொடுத்த உதவி தான் இப்படைப்பு.

படைப்பு பற்றிய ஒரு சிறு விபரம்
ஒரு சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குள்ளும் சில விடயங்கள் நெருடிக் கொண்டிருக்கும் சிலர் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள் பலர் தமக்குள் அமுக்கி வைத்துக் கொள்வார்கள் அந்தவகையில் வழமையாக எழுத்துக்களால் விதைத்துக் கொள்ளும் நான் இம்முறை சில காட்சிகளால் நகைச்சுவையுடன் விபரித்துள்ளது தான் “துலைக்கோ போறியள்“ என்ற இக்குறும்படமாகும்.
இத்தலைப்பானது எமது பிரதேசங்களில் மிகவும் அருகிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு பேச்சு மொழியாகும். ஒருவர் போய்க் கொண்டிருக்கும் போது “எங்கே போகிறீர்கள்“ என்பது ஒரு அபசகுணமாககக் கருதப்படுவதால் இப்படி அழைத்து வினாவுவார்கள். 

உடுப்பிட்டி நாவலடி, நெல்லியடி, நவிண்டில், வதிரி போன்ற 5 களங்களில் உருவாக்கப்பட்ட 8 காட்சிகளுடன் இக்குறும்படம் உருவாக்கம் பெற்றுள்ளது.
படம் தொடர்பான பணிகள் முடிவடைந்துள்ள போதும் வரும் மாதம் அளவில் தான் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மனம் சற்றும் கூட சலிக்காமல் கமராவுடன் ஒத்துழைத்த செல்லா அண்ணா கணணியுடன் போராடிய செல்வம் அண்ணா நேர காலம் பாராமல் ஓடி வந்து ஒத்துழைத்த ஜெயதீபன், செல்வம் அண்ணா, ஏரம்பு ஐயா, ஆசிரியை சுதேசினி போன்றோர் என்றும் என் நன்றிக்குரியவர்கள்.
என்ன படைப்பு எப்படியானது என்று கூட அறியாமல் ”மதிசுதாவா செய்தவன் அப்படியென்றால் சரி” என்று சம்மதம் சொல்லி இசையமைத்து தந்த அற்புதன் அண்ணா.
பலவகையான தொடர்புகளுக்கு உதவிய வேல் முருகன்.
அதுமட்டுமல்லாமல் நேர காலம் பாராமல் என்ன வடிவத்தில் கேட்டாலும் மாற்றி மாற்றி வடிவமைத்துத் தந்த பதிவர் மதுரன் மற்றும் ஆலோசனைகள் தந்த அண்ணர் மௌனரூபன் ஆகியோருடன் சகல விதத்திலும் ஒத்துழைப்புத் தந்த செல்லா வீடியோ அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் ஆரம்பத்திலேயே நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


என் 200 வது பதிவு பற்றியது

வன்னியில் இருந்து மீளும் போதே (நலன்புரி முகாமில் இருக்கும் போது) வலைத்தளம் ஒன்று அமைத்து எழுத வேண்டும் என்ற ஒரு லட்சியத்தோடு பொழுது போக்காக எழுத ஆரம்பித்த இத்தளத்தில் நான் பெற்ற வெகுமதிகள் நான் எதிர் பார்க்காதவையே. அதன் பின்னர் அடைந்த வேலைப்பழுக்கள் எனது பதிவிடுதலுக்கான நேரத்தைப் பிடுங்கிக் கொண்டாலும் 3 வருடத்தில் 200 வது பதிவைத் தொடுகிறேன்.
ஆனால் இத்தனைக்குள்ளும் 467,000 என்ற பார்வைகளின் எண்ணிக்கையானது ஒரு பதிவுக்கான சரசரி பார்வைகள் 2300 என்பதைக் கொடுத்துள்ளது அந்த வகையில் எனக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை எண்ணிக் கொள்கிறேன்.
ஆரம்ப காலத்தில் இருந்து என் பதிவுலக வளர்ச்சிக்கு உதவியவர்களில் ஒருவரான ஜனா அண்ணா தனது பதிவில் குறிப்பிட்டவை இந்த தொடுப்பில் உள்ளது.

இந்தவாரப் பதிவர் - திரு -மதி.சுதா

 நன்றிச் செதுக்கலுடன் 

அன்புச் சகோதரன் 

ம.தி.சுதா


18 comments:

Thursday, 20 June 2013

2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை

கடந்த 15.6.2013 அன்று வீரகேசரியில் வெளியாகிய எனது ஆக்கம்.....


வடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் குறும்படப் போட்டி 2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை

தொழில் நுட்பம் என்பது இலகுவாக்கப்பட்டு ஒவ்வொரு தனிமனிதன் கைகளுக்குள்ளும் புகுந்து கொண்டதன் பலனை திரைப்படங்கள் மேல் அதீத ஆர்வம் கொண்ட ஒவ்வொரு ரசிகனையும் உசுப்பேற்றி குறும்படம் என்னும் ஒரு திரைப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு ஏதுவாக அத்துறையை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் கடந்த 31.5.2013 அன்று யாழ்ப்பாணத்தில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சால் வடமாகாணத்திற்குற்பட்டவர்களுக்கான குறும்படப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
முதற்கட்டத் தெரிவுப் போட்கள் வவுனியாவில் இடம்பெற்று அதில் தெரிவு செய்யப்பட்ட 15 குறும்படங்கள் யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களத்தில் நடுவர்கள் முன்னிலையில் ஒளிபரப்பப்பட்டது.

அப்படங்கள் தொடர்பான ஒரு சுருக்கப் பார்வை இதோ….
1. பாடங்கள்
வாழ்க்கையில் தலை முறை கடக்கவேண்டிய சில பாடங்களை படங்களாகக் கொண்டிருந்த ஒரு குறும்படமாக இருந்தாலும் ஆவணப்படம் ஒன்றின் சாயலை பிரதிபலித்ததால் மற்ற குறும்படங்களில் இருந்து சற்று வேறுபட்டதாகத் தோற்றமளித்தது.

2. சலனங்கள்
முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மீது மற்றவர் வைத்திருக்கும் பார்வை நிலையைத் திசை திருப்ப வைக்கும் கதைச் சுருக்கத்தைக் கொண்டு அமைந்திருந்தது. அத்தனை காட்சிகளும் இரவில் படமாக்கப்பட்டது இயக்குனரின் தற் துணிவைக் காட்டியிருந்தாலும் பல இடங்களில் பாத்திரங்களது முகபாவனை இருளால் மறைக்கப்படடிருந்தது.

3. அப்பு
வன்னியின் முழங்காவிலில் இருந்து தேர்வாகியிருந்த இக்குறும்படமானது ஈழத்தின் முக்கிய கலைகளில் ஒன்றான தெருக்கூத்து கலைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்டிருந்தது. இக்குறும்படமானது முதுமையின் இடர்பாடுகளைக் கொண்ட கதைக்கருவையும் கை தேர்ந்த பாத்திரத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் பிறழ்வடையாத நாடகச் சாயலானது குறும்படம் என்ற எல்லைக்குள் உள் இழுக்கத் தவறி விட்டது.

4. தண்ணீர்
5 ரூபாய் தபால் முத்திரையில் எழுதிவிடக் கூடிய ஒரு அழுத்தமான கதையை மட்டும் கொண்டு காட்சிகளையும், யதார்த்தமான பாத்திரம் மற்றும் உணர்வைப் பிரதிபலிக்கும் இசை இவை மட்டும் கொண்டு தத்ரூபமாக வார்த்தெடுக்கப்பட்ட படமாகும்.

5. வேகம்
இளமையின் வேகம் எந்தளவு பாரிய விபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை உணர வைக்கும் குறும்படமாகும். இதில் கதை மற்றும் பாத்திரங்களின் வேகத்தை விட ஒளிப்பதிவாளரின் வேகம் தான் அதிகம் ரசிக்க வைத்தது.

6. வல்லூறு
போதை தரும் உறவுப் பிரிகையும் சிறுவர்களிடையேயான உணர்வுர்ச் சேர்கையையும் தத்ரூபமாக கூறிய படம். இக்குறும்படத்தின் வெற்றிக்கு இயற்கைச் சூழலும் அத்துடன் ஒளிப்பதிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட இயற்கை ஒலிகளும் சாதகமாக அமைந்திருந்தாலும் திரைக்கதையின் வேகம் சற்று ரசனையையும் தாமதப்படுத்தியிருந்தது.

7. தோள் கொடு
நியமாகவே வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒரு மாற்றுத் திறணாளியைக் கொண்டு அவன் மனநிலையையும் மனித நேயத்தையும் பொறுப்பற்ற மனிதருக்கு உணர்த்தும்படமாகும். சாதாரண கமரா மற்றும் ஒளித்தொகுப்பு தொழில்நுட்பத்துடன் உருவான நல்ல படங்களில் ஒன்றாகும்.

8. சாம்பல்
நாம் பயன்படுத்தும் பெறுமதி குறைந்த ஒரு அற்ப பொருளுக்குப் பின்னும் எத்தனை ஏழைகளின் உதிரம் ஒளிந்திருக்கிறது என்பதைக் கூறியுள்ள படம் சாம்பலாகும். சிறந்த ஒளிப்பதிவோடும் இசையோடும் மட்டும் பயணித்திருக்கும் இப்படத்திற்கு வசனங்களும் இணைந்திருந்தால் உணர்வுகள் மேலோங்கியிருக்கும்.

9. மரண அறிவித்தல்
பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க எண்ணி புலம்பெயர் தேசமனுப்பும் பெற்றோரின் வாழ்வு எவ்வளவு இருள்மயமானது என்பதற்கு நல்ல உதாரணமாக அமைந்த படமாகும். நிறப்பிரிகையோ காட்சி மாற்றமோ சரியாக அமையாத flash back காட்சிகள் இப்படம் தொடர்பான சிறு குழப்பத்தை ஏற்றுடுத்தியது.

10. விட்டில்கள்
இணையத் தொழில்நுட்ப வளர்ச்சி இளைய தலைமுறையின் வாழ்வை எப்படி சீரழிக்கிறது என்பதை மட்டக்களப்பு கொலைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்துக் கூறும் படமாகும். சிறந்த படத் தொகுப்பும் ஒளி நிறக்கலவையும் படத்தின் தரத்தை மற்றைய படங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டியதுடன் பின்னணி குரல் முயற்சியிலும் மற்றைய படங்களில் இருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது. கதையின் கனதியற்ற தன்மையும் நாயகியின் நடிப்போடு ஒட்டாத தன்மையும் படத்திற்கு மறையாக அமைந்திருந்தது.

11. நோ
பல குடும்பங்களின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிப் போகும் பெண்களின் வேதனையை கமராவுக்குள் கொண்டு வந்த குறும்படமாகும். ஆனால் அளவுக்கதிகமான வன்முறை சார்ந்த ஒரே காட்சிகள் மீள மீள வந்து போனது உறுத்தலாகிப் போனது.

12. எழுத்துப்பிழை
ஒரு விலைமாதுவுக்கும் அவள் குழந்தைக்குமிடையேயான பாசப் பிணைப்பையும் உணர்வுகளையும் உணர்வு பூர்வாமாகக் கூறிய குறும்படமாகும். கதையில் வந்து போன அத்தனை பாத்திரங்களும் கதையோடு ஒன்றித்துப் போனது படத்தின் சிறப்பை மென்மேலும் அதிகரித்திருந்தது.

13. பாதினியம்
இன்றைய சூழலில் சமூகத்தில் இடம்பெறும் இளைஞர் தொடர்பான பிரச்சனைகளை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படமாகும். ஆனால் படத்தில் கவனிக்கத் தவறிய எழுத்துப்பிழைகளும் முன்னுக்குப் பின் முரணான திரைக்கதையும் படத்தின் கனதியைக் குறைத்திருந்தது.

14. ஏ கோல் (a call)
இக்குறும்படப் போட்டியில் ஒரு முற்போக்கான திரைக்கதையுடன் களமிறங்கிய ஒரே ஒரு படம் இது தான். 12பி திரைப்படத்தின் அடிப்படைக் கதை அமைப்பைக் கருவாகக் கொண்டு உருவான வித்தியாசமான படமாகும். ஆனால் மொழி ஆளுகை இழந்த தலைப்பு உறுத்தலாக இருந்ததுடன் இறுதிக் காட்சி ஏதோ ஒரு ஹெலிவுட் படத்தை நினைவுபடுத்துவது போல அமைந்திருந்தது.

15. விழித்திடு
இன்றைய சமூகத்தில் பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கூறியுள்ள ஒரு படமாக அமைந்திருந்தது. ஆனால் எதற்கெதிராக ஒரு படைப்பு உருவாக்கப்படுகிறதோ அதையே அளவுக்கதிகமாகக் காட்டக் கூடாது கோட்பாட்டை கவனிக்கத் தவறியது படத்தின் மீதான பார்வையை வேறு திசைகளுக்கு மாற்றியிருந்தது.

சிறப்பாக திரையிடப்பட்டிருந்த குறும்படங்களானது ஈழத்தின் குறும்பட வளர்ச்சியை தெளிவாகப் புடம் போட்டுக் காட்டியிருந்தது. சில படங்கள் குறும்படங்கள் என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்படாதவை என்ற ஒரு விமர்சன நோக்கெழுந்தாலும் இவை ஆரம்ப கட்ட வளர்ச்சிப்பாதை என்பதால் அடுத்தடுத்த காலப்பகுதிகளில் பெரும் மாற்றத்துடனான குறும்பட வளர்ச்சிப் போக்கு உருவாகும் என்பது அனைவரதும் திடமான நம்பிக்கையாகும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
உடுப்பிட்டியூர்
ம.தி.சுதா

3 comments:

Thursday, 13 June 2013

மலையகத்தில் இருந்து வெளிவந்துள்ள மனதை வருடும் பாடல்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
அவ்வப்போது உருவாகி வரும் எம்மவர் பாடல்களில் சிலது அப்படியே எம்மனதில் நிலைத்து விடுகிறது.
அந்த வகையில் நேற்று ஒரு சகோதரர் மூலம் எனக்கு கிடைத்த இப்பாடலானது தொண்டைக் குழியில் தங்கிஇடையிடையே வாய்வழியே எட்டிப் பார்க்கத் தவறவில்லை.
அப்பாடலுக்கான இசையை துஸ்யந்தன் செல்வராசா என்ற மலையகத்தைச் சேர்ந்தவர் இசையமைத்திருக்கிறார்.
ரஸ்லான் பாடலை பாடியிருக்க,
வயலின் சுறங்க ராஜபக்ச,
வீணை சரவண சுந்தரி முருகன் (கொழும்பு விஞ்ஞான பீட மாணவி)
பியனோ வி.செந்தூரன்
போன்றவரின் கூட்டணியுடன் கிட்டாரை துஸ்யந்தனே மீட்டியிருக்கிறார்.
இவர் நுவரெலியாவைச் சேர்ந்தவர் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவனாக இருக்கிறார்.
.இதில் ரஸ்லான் சக்தி சுப்பர் ஸ்டார்களில் ஒருவராவார்.

மிகவும் நேர்த்தியான இசைக் கோப்புடன் உருவாகியுள்ள இப்பாடலானது மலையக மண்ணின் ஒரு தடமாக இருக்கும் என்பது என் நம்பிக்கையாகும்.

இவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்காக இசையமைத்த தமிழ் வாழ்த்துப்பாடல் கீழே இணைத்துள்ளேன்.. அப்படியே லயிக்க வைக்கும் ஸ்வரங்கள் இவர் விரல்களுக்கும் ஒளிந்திருப்பதை உணர அதுவும் ஒரு நல்ல உதாரணமாகும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

3 comments:

Wednesday, 12 June 2013

என் உயிருடன் விளையாடிய வல்லைப் பாலமும் ஊடகங்கள் காணாத பக்கமும் வீடியோவாக

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
முற் குறிப்பு- இச்சம்பவம் ஆனது கடந்த சில நாட்களின் முன்னர் இடம்பெற்ற இயற்கைக் குழப்பத்தின் போது நடந்தது. அதன் வீடியோவை உடனே ஏற்ற முடிந்தாலும் பதிவெழுத நேரமின்மையால் காலதாமதமாகிவிட்டது.

யாழில் அமைந்துள்ள முக்கிய பெருந்தெருக்களில் யாழ் பருத்தித்துறை வீதிமுக்கியமானதும் அதிக வருவாய் தரும் விதியுமாகும் (பிரயாணிகள் மூலம்)
இதன் சீர் திருத்தப்பணிகள் கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வருகின்ற போதும் இன்னும் முடிவதாகத் தெரியவில்லை.

இதே பாணியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த யாழ் பலாலி வீதியானது ஜனாதிபதியின் வருகையை அடுத்து ஒரே இரவில் முழுமையடையச் செய்யப்பட்டது பலர் அறிந்ததே. ஆனால் இதே வீதியில் பல குன்றும் குழிகளும் மாதக்கணக்காக இருப்பது மட்டுமல்லாமல் வீதி புனரமைப்பாளரால் பல மாதக்கணக்காக பாரிய குழிகள் தோண்டி விடப்பட்டுள்ளது.

இதில் பலவற்றுக்கு எச்சரிக்கை சமிஞ்ஞை கூட இல்லாத நிலையில் இருக்கிறது. இதில் மிக முக்கியமாக காணப்படுவது வல்லைப் பாலத்திற்கு இருமருங்கிலும் இருக்கும் பாரிய பள்ளமாகும். இதன் ஒரு பகுதி சாதாரண பள்ளமாக இருந்தாலும் மறுபகுதி மிகவும் ஆபத்தானது. கடந்த 4 மாதங்களாக இருக்கும் இக் குழி ஏன் இருக்கின்றது என யாருக்குமே தெரியாது.

அதுமட்டுமல்லாமல் இதனூடாக நிச்சயம் யாழின் அனைத்து உயர்பதவி வகிக்கும் அதிகாரிகளும் ஏசி வாகனத்தில் ஊர்ந்து கடந்து சென்ற அனுபவம் இருக்கும் என்பது மிக மிக உறுதியான விடயமாகும்.

மேலும் இங்கு கடந்த சில தினங்களாக தலைகீழாக ஒரு எச்சரிக்கை பதாதை தொங்க விடப்பட்டிருந்தது ஆனால் இப்பதாதையானது யாழ் நோக்கிச் செல்வோருக்கு மட்டுமே தெரியும் யாழிலிருந்து பருத்துறை நோக்கி வருபவருக்கு இப்படி ஒரு கிடங்கிருப்பது தெரியாது. அதுமட்டுமல்லாமல் இப்போது அந்த பதாதையும் அங்கே இல்லை.
இப்போது பலத்த காற்று வீச ஆரம்பித்துள்ள நேரத்தில் சாதாரணமாகவே அவ் வெளியில் பல உந்துருளிப் பிரயாணிகள் கடலுக்குள் விழுந்த சம்பவங்களும் இடம்பெற்ற வண்ணமுள்ளது.
விபத்துக்கான காரணங்களை எங்கள் வசம் வைத்துக் கொண்டு விபத்து சம்பந்தமான போதனைகளைப் போதித்து என்ன ஆகப் போகிறது.
சம்மந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுப்பார்களா?

சரி தலைப்பிற்கு வருவோம்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் அப்பாலத்தில் நடந்த சம்பவம் இது.
நான் உடுப்பிட்டியில் இருந்து யாழ்  நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அப்போது பாலத்தில் அக்கிடங்கை கடந்து ஏறுகையில் எதிரே ஒரு ஆட்டோவும் பிக்அப் ரக வாகனமும் வேகமாக வந்து கொண்டிருந்தன.
சடுதியாகக் கிடங்கைக் கண்ட ஆட்டோக்காரர் பிறேக்கை (வேக நிறுத்தியை) பிடித்தார் அவர் பின்னால் வந்த பிக்கப் வேகமாக வந்ததால் அதன் ஓட்டுனரும் பிறேக்கைப் பிடித்தார். இரும்புப் பாலமாகையால் பிடிமானமில்லாத ரயர்கள் சறுக்க பிக்கப் திரும்பிக் குறுக்காக நின்றது.

என்னுடைய உந்துருளியாகையால் என்னால் பிறேக் பிடிக்க முடியாது பிடித்தால் சறுக்கி விழுத்தி விடும் அளவுக்கு மழை.
நான் சுதாகரிப்பதற்கு முன்னரே பிக் அப்பிற்கும் பாலத்திற்கும் இடைப்பட்டிருந்த 3 அடி (கிட்டத்தட்ட) இடைவெளிக்குள்ளால் புகுந்த உந்துருளி மறுபக்கம் கடந்து விட்டது. மறு நாள் போய் தான் இந்த வீடியோவை எடுத்ததுடன் மேலே குறிப்பிட்டிருந்த ஆக்கத்தையும் (சுய புராணத்திற்கு மேல் உள்ளது) ஒரு யாழ்ப்பாணத்து தினசரிப் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அதை கண்டு கொண்டதாகத் தெரியாததால் பத்திரிகைக்கும் எனக்கும் உள்ள விதிமுறையை மீறி முதலே பதிவிட்டுக் கொள்கிறேன்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

5 comments:

Monday, 3 June 2013

சிங்கம் 2 பாடல்கள்- ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைப் பார்வை

முற்குறிப்பு- இது ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைக்குட்பட்ட பார்வையே...

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?

ஒரு திரைப்படத்தின் (இந்திய) முக்கிய அங்கமாகக் கருதப்படுபவற்றில் பாடல்கள் முக்கிய இடம் பிடிக்கிறது. அந்த வகையில் மாற்றானில் அடிவாங்கிய சூர்யா மாற்றம் ஒன்றுக்காக காத்திருக்கும் இவ்வேளையில் சிங்கம் 2 க்கான பாடல்கள் வெளியாகியிருக்கிறது.
ஆர்வத்தோடு காத்திருந்து கேட்டதற்கான திருப்தியை ஒரு பாடல் கூட கொடுக்கவில்லை. அத்தனை பாடலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பின்னணி அடி உதையுடனேயே ஒலிக்கிறது.

சென்ற முறை அளவுக்கதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்தாலும் கதையின் கனத்தை அனுஷ்காவின் காதலும் தூக்கி நிறுத்தி வைத்திருந்தது. அதன் காரணமாகவே பல பெண்களும் துணிந்து அப்படத்தை வரவேற்றுக் கொண்டார்கள். அதுமட்டுமல்லாமல் 3 காதல் ததும்பும் பாடலுக்கும் இடமளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை அந்தளவு காதல் இருக்குமா தெரியவில்லை (மனைவியிடமும் காதல் காட்டலாம் தானே)
காதல் வந்தாலே – (விவேகா)
என் இதயம் – (நா முத்துகுமார்)
Stole My Heart – (விவேகா)
மற்றைய இரு பாடல்களில் ஒன்று தீம் பாடலாக போக மற்றைய விவேகாவின் ஒரு பாடல் ஹீரோயிசப்படலாகிப் போனது.

ஆனால் இம்முறை புரியவில்லை என்ற சுவேதா மேனனின் பாடல் மட்டுமே காதல் ததும்ப ஒலிக்கிறது. அத்துடன் பைலா இசையை நினைவூட்டும் வகையில் கண்ணுக்குள்ளே என்ற பாடல் ஜாவிட் அலி மற்றும் பிரியா ஹிமேஸ் குரலில் ஒலிக்கிறது நிச்சயம் இருபாடலும் நாயகி கர்ப்பாமாக உள்ள நேரத்தில் கொடுப்பாரென்றால் கருக்கலைந்து விடும் காரணம் அந்தளவு துள்ளல் இசை.

சென்ற முறை காதல் வந்தாலே பாடல் மூலம் கவர்ந்த பாபா சேகலை இம்முறை ஒரு ஹீரோயிச பாடலுக்கு பயன்படுத்தி தேவி சிறி பிரசாத்தும் சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறார்.
காட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கும் தில்லான ஒரு சிங்கம் என்ற பாடலை கர்ஜனையோடு சங்கர்மகாதேவன் படித்திருக்க அந்தப்பக்கமே தன் குரலை தெளிக்காமல் ஒளிந்திருக்கிறார் நம்ம DSP.

நம்ம DSP (தேவிசிறி பிரசாத்) இடம் ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசை..
பல அருமையான நல்ல பாடல்களைத் தந்த நீங்கள் உங்கள் இசையை 200 அல்லது 300 வருடம் வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக உபயோகிக்கப் போகிறீர்களா? காரணம் உலகமெல்லாம் பரந்திருக்கும் இசைக்கு பஞ்சம் வந்துவிடும் என நினைத்தோ தெரியவில்லை உங்கள் இசையை கொஞ்சம் கொஞ்சமாகவே பயன்படுத்துகிறீர்கள்.
ஏற்கனவே மாயாவி, மழை போன்ற படப்பாடலுக்குள் கஞ்சத்தனம் காட்டி இசையை கோர்த்து விட்டதை மறக்க முடியவில்லை. அதே போலவே இம்முறையும் பல இடங்களில் இசைச் சிக்கனத்தைக் கடைப்பிடித்திருக்கிறீர்கள். 
எதுவோ புரியவில்லை பாடல் கூட அந்தளவுக்கு மோசமில்லை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.. மிகுதி காட்சிகளே தீர்மானிக்கும்..

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

2 comments:

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top