Featured Articles
All Stories

ஞாயிறு, 25 நவம்பர், 2012

அவுஸ்திரேலிய கடல் பயணங்களும் தீராத சந்தேகங்களும்


ஈழப் போரின் பின்னான காலப்பகுதியானது இளமை, கல்வி, தொழில் மற்றும் பணம் போன்றவற்றை தொலைத்த இளையவருக்கு ஒரு வெறுமையான சூனியத்தைக் காட்டினாலும் ஓரளவு பொருள் வசதியோ ஆள் உதவியோ கிடைத்தவருக்கு பிரகாசத்தைக் காட்டியது.

அதில் முதல் கட்ட பெரும் எடுப்பாக அமைந்தது கனடாவுக்கான கப்பல் பயணமாகும். அதிலும் போரின் பிடியில் மீண்டு தப்பி போனவர்களை விட போர் சாராத பகுதியில் வாழ்ந்து போன தமிழர்களே அதிகம். அதன் பின்னர் வழமையான ஏஜன்சிகள் மூலம் அப்பப்போ யாராவது சிலர் போய்க் கொண்டிருநதாலும் இவ்வருட ஆரம்பத்தில் நடை அவுஸ்திரேலிய பயணங்கள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்திச் சென்றது. ஆனால் இவை ஒன்றும் முதலாவது பயணமல்ல இதற்கு முன்னரும் பல வருடங்களாக கடலால் போய் அகதி அந்தஸ்து பெற்று வாழ்பவர்கள் உள்ளார்கள்.
ஆனால் அந்த பருவகாலத்திற்குரிய பயணங்களின் ஆரம்பத்தில் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த ஒரு சிலரே உருண்டு பிரண்டு பணத்தை திரட்டி பயணிக்க அதனோடு அப்போர்வையை போர்த்திக் கொண்டு எம்மவர் வழமையான பயணத்தை ஆரம்பித்தார்கள்.

3, 4 லட்சங்களுடன் ஆரம்பித்த பயணமானது 15 லட்சங்களையும் கடந்து நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் பல போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டு வாயை மூடி வாழ்பவர்களின் தொகையும் மிக மிக அதிகமாகவே மாறிவருகிறது.
அண்மையில் திருகோணமலை சென்ற போது ஒரு நபர் தனது pulser 180 மோட்டார் சைக்கிளை ஒரு லட்சத்தி முப்பதினாயிரத்திற்கு அவசரமாக விற்றுச் சென்றதாக சொன்னார்கள். நான் நினைத்தேன் பழைய சைக்கிள் என்றபடியால் தான் அவ்வளவு விலை போயிருக்கிறது என்று. ஆனால் இரண்டு லட்சத்து அறுபதாயிரத்துக்கு எடுத்து 7 மாதமே ஆனா சைக்கிளை அவ்விலைக்கு விற்று விட்டு ஒருவர் போகிறாரென்றால் அவர் துணிவை என்னவென்று சொல்வது.
இதே போன்று முல்லைத்தீவு போன்ற பகுதிகளிலும் மலிவாக வாகனங்கள் கிடைக்கிறது மட்டுமல்லாமல் மிக மலிவாக மிகத் தரமான போன்களையும் பெறக் கூடியதாக உள்ளது.

இதனிடையே அகதி அந்தஸ்து கோரி பயணிப்பவர்களில் பல சிங்களவர்களும் பயணிப்பது தான் அவுஸ்திரேலியாவின் சட்டங்களில் இவ்வளவு ஓட்டை உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஏனென்றால் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் அப்படி யாரும் வந்ததாகவே தெரியவில்லை.
ஆனால் சில வாரங்களாக விருப்பின் பேரில் நாடு திரும்புகிறார்கள் என்ற பேரில் பலர் திரும்பி வருகிறார்கள். அப்போது என்னிடம் இருந்த பெரும் கேள்வி என்னவென்றால் இத்தனை லட்சங்களைக் கட்டியதுமல்லாமல் இரண்டு வாரங்களுக்கு மேலாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணித்து அங்கே 3 நேரச் சாப்பாட்டுடன் ஒரு மணித்தியால கணனியையும் விட்டு விட்டு ஏன் இவர்கள் விரும்பித் திரும்ப வேண்டும்.

ஒன்றில் அவர்கள் அங்கே அகதி அந்தஸ்து மற்றவர்களுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூலிகளா? அல்லது பணத்துக்காக படகுகளை ஓட்டிச் சென்றவர்களா? இப்படி பல கேள்விகள் இருந்தாலும் அவுஸ்திரேலியாவில் பல ஓட்டைகள் இருக்கின்றது என்பது பயணிக்க காத்திருப்பவருக்கு ஒரு தென்பைக் கொடுக்கின்றதே தவிர அந்த ஓட்டைகள் மூடப்படுமா அல்லது திறந்தே இருக்குமா என்பது எக்கணத்திலும் தீர்மானிக்க முடியாத ஒன்றாரும்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
பிற்பகல் 10:57 - By ம.தி.சுதா 5

5 கருத்துகள்:

செவ்வாய், 13 நவம்பர், 2012

எனது பார்வையில் துப்பாக்கி- விமர்சனம்

தீபாவளி என்றால் எந்த சூழ்நிலையிலும் ரசிகர்களுக்கு வஞ்சகம் செய்யாதவர் நடிகர் விஜய். அதற்கு சரியான எடுத்துக்காட்டுத் தான் சந்திரமுகியுடன் போட்டியிட்ட சச்சின் திரைப்படமாகும். அதே வகையில் இம்முறையும் துப்பாக்கியால் சரமாரியான வேட்டுக்களைத் தீர்த்துத் தள்ளியிருக்கிறார் நம்ம விஜய்.
முருகதாசின் இயக்கத்தில் கஜால், ஜெயராம் மற்றும் சத்தியன் கூட்டணியில் கலக்கியிருக்கும் இப்படத்திற்கு ஹரிஸ்ஜெயராஜ் இசையமைக்க தாணு தயாரித்திருக்கிறார்.
ஒரு மாஸ் ஹீரோவை வைத்துப் படம் எடுப்பது எவ்வளவு சவாலானது என்பதை சாதித்துக் காட்டியிருக்கும் முருகதாசை புகழாமல் இவ்விடத்தில் நகர முடியவில்லை. ஒரு விறு விறுப்புக்கான திரைப்படத்தில் ஆரம்பம் முதலே விறு விறுப்பை புகுத்துவது தான் சாலச்சிறந்தது. ஆனால் விஜய், ரஜனி போன்றோரின் படத்தில் இவை சாத்தியமற்ற ஒன்று காரணம் முதல் அரை மணித்தியாலங்களை ரசிகர்கள் தம் கட்டுப்பட்டுக்குள் வைத்துக் கொள்வதால் பார்வையாளனுக்கு சலிப்பு ஏற்படுத்தி படத்துக்கான முதல் விமர்சனமே எதிர்மறையானதாக அமைய வாய்ப்பிருக்கிறது.
அதைத் தீர்க்கும் வகையில் முதலில் ஒரு சண்டை, அதன் பின் ஒரு பாடல் அடுத்த 10 நிமிடத்துக்குள் கஜால் அகர்வாலின் அறிமுகம் என ரசிகர்கள் அனைவரையும் கத்தி களைக்க வைத்து விட்டு தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.
நடிகர் விஜயின் வழமையான நையாண்டி நகைச்சுவைகள் இருந்தாலும் இம்முறை சற்று முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டே கூறுவதால் படத்தின் சீரியஸ் தன்மையை ஆரம்பத்திலேயே உணர முடிகிறது. உதாரணத்திற்கு முதல் காட்சியிலேயே விஜயிற்கான பெண் பார்க்கும் படலத்துக்கு செல்லும் போது விஜய் கூறுவார். “வந்த ரயட்டுக்கு ஒரு குளியல் ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டுப் போகலாமே” அதற்கு தாயார் யதார்த்தமாக இம்முறையும் முடியாது உனக்கு வயசு ஏறிக்கிட்டே போகிறது என்பார். அதற்கிவர் ஒரு நாளைக்குள்ள வயசு ஏறிடாதும்மா என தனது வழமையான பாணியில் முறாய்ப்பாக சொல்லி எம்மை நகைக்க வைத்து விடுகிறார்.
கதைச் சுருக்கத்தில் ராணுவத்தில் இருக்கும் விஜய் மும்பைக்கு விடுமுறையில் வருகிறார். அங்கே பொலிஸில் இருக்கும் சத்தியனுடன் ஊர் சுற்றுவது தான் வேலை. ஒரு முறை இவர்கள் பயணம் செய்த வண்டியில் ஒரு தீவிரவாதி வேறேங்கோ கொண்டு செல்ல முற்பட்ட குண்டு வெடிக்கிறது. ஆனால் அத்தீவிரவாதியை பிடித்து பொலிசில் கொடுக்கிறார். அவன் ஒரு பொலிசாராலேயே தப்பிக்க வைக்கப்பட இவரது வேட்டை தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் பொலிசாரைக் கூட தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு செய்யத் தூண்டுகிறது.
கதையில் பெரியளவு வித்தியாசத்தைக் காணமுடியாவிட்டாலும் விஜயின் வழமையான பாணியில் இருந்து பெரிதும் மாறுபட்டதாகவும் அளவுக்கதிகமான ஹீரோயிசம் இல்லாமலும் கில்லியில் பார்த்த விஜயின் இன்னும் ஒரு புதிய தோற்றத்தைக் காணக் கூடியதாக உள்ளது.
நடனத்துக்காக தினேசும், சிறீதரும் விஜயை நன்றாகப் புழிந்து விட்டார்கள் என்பது அவரது நடன அசைவுகளிலேயே தெளிவாகத் தெரிகிறது.
கஜால் அகர்வால் அழகு விருந்து படைத்தாலும் திரில் நிறைத்த கதைப் பகுதிக்குள் நுழைக்கப்படவே இல்லை என்பதால் ஆரம்பத்தில் மட்டும் ஒரு சில காட்சிகளால் மனதுக்குள் பதிந்ததோடு மறைந்து போய் விடுகிறார்.
ஒரு திரில் படத்துக்கு பின்பகுதியில் பாடல்களை நுழைப்பது எவ்வளவு தொய்வை ஏற்படுத்தும் என்பதை முருகதாஸ் உணரத் தவறிவிட்டார்.
தீவிரவாதிகளை குழுவாகத் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் தாக்கும் இடத்திலும், தீவிரவாதிகளை அவர்கள் இடத்திலேயே தங்கையை பணயமாக வைத்து அழிக்கும் இடத்திலும் விஜய் ஸ்டைலில் ஒரு கலக்குக் கலக்கி விடுகிறார். துப்பாக்கி சுழற்றலக்காகவே அவர் ஒரு வாரம் பயிற்சி எடுத்திருப்பார் என நினைக்கிறேன்.
தீவிரவாதிகளை குழுவாகத் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் தாக்கும்காட்சியும் அதற்காக விஜயின் கெட்டப்பும் fox, axn ல் ஒளிபரப்பான பிரபல தொடரான 24 hours ஐயும் அதில் நடித்த ஜக் பவர் ஐயும் அப்படியே நினைவுபடுத்திச் செல்கிறது. அதே போல கையில் சிப்ஸ் பதித்துச் செல்லும் இடத்திலும் misson imposible ஐ நினைவூட்டுவது போல உள்ளது.
சந்தோஷ் சிவன் தனது ஒளிப்பதிவை திறம்படச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பஸ் மற்றும் கப்பல் குண்டு வெடித்தால் காட்சிகள் மிகவும் நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளது.
விஜய் இப்படத்திலும் இரு தங்கைகள் மூலம் தங்கை சென்டிமென்டை கையாண்டிருக்கிறார். அனைவரும் எதிர் பார்த்தது போல படத்தில் அலட்டல் அலப்பாறைகள் நிறைந்த எந்நவொரு பஞ்ச் வசனத்தையும் விஜய் பேசவில்லை.
அதே போல ஹரிசின் இசையும் விஜயின் ஸ்டைலுக்கும் படத்தின் விறுவிறுப்புகம்கும் பெரிதும் ஒத்துப் போவது மிகப் பெரிய பிளசான விடயமாக இருக்கின்றது.
மொத்தத்தில் துப்பாக்கியானது விஜயின் இன்னொரு பரிமானத்தைக் காட்டிய திரைப்படமாகும்.
நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதி்சுதா
குறிப்பு - யாழின் செல்லா திரையரங்கில் முதல் காடச்சியை பார்த்தைப் பற்றியெ ஒரு பதிவு எழுதலாம் என்றாலும் கொழும்புப் பயணத்தால் தொலைத்த 2 நாள் நித்திரையுடன் சேர்த்து 3 வது நாளாக இன்றைய நாள் நித்திரையையும் தொலைத்து பார்க்க வேண்டும் என்ற வெறியில் இப்படத்தை பார்த்தாச்சு பதிவும் போட்டாச்சு இனி என்ன படுக்க வேண்டியது தான் மிச்சம்.
முற்பகல் 5:18 - By ம.தி.சுதா 12

12 கருத்துகள்:

வியாழன், 8 நவம்பர், 2012

ஈழ வியாபாரி விகடனுக்காக ஈழத்திலிருந்து சில ஆதாரங்கள்

வணக்கம் உறவுகளே
சேமம் எப்படி?
ஒரு சில வாரத்துக்கு பின்னர் எழுத வேண்டும் என்ற ஒரு அறச் சீற்றத்தால் வலையுலகத்துக்குள் வந்து போகிறேன்.


விளம்பரம் என்பது எந்த ஒரு துறைக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அதை விரும்பாதா எந்தவொரு மனிதனும் இருக்கமாட்டான். அதற்காக பார்ப்பவரை ஏமாளி என்று நினைத்து கொண்டு நடப்பவர்களை சொல்வதற்காக சில வார்த்தைகளை பிரயோகிக்க முடிவதில்லை.
வழமையாக பிரபலத்திற்காக இணையத்தளங்களே சில அபத்தமான ஆதாரமற்ற செய்திகளை வெளியிடும். அத்துடன் பரபரப்பிற்காக ஒரு செய்தியை வெளியிட்டு விட்டு தமக்கான வருகையாளர் தொகை கிடைத்ததும் அச்செய்தியை திருத்தியோ அல்லது அழித்தோ விடுவார்கள்.
ஆனால் அச்சு ஊடாகமான விகடனின் இச்செயல் ஆனாது ஒரு பொறுப்புள்ள பிரபலமான ஊடகத்தின் மேல் பல கேள்விகளை எழ வைத்துள்ளது.
1. அவ் ஊடகம் பரபரப்பிற்காகவும் விளம்பரத்துக்காகவும் இதைச் செய்திருக்கலாம். அல்லது.
2. யாரோ குதிரையோடி சித்தி பெற்ற ஊடகவியலாளரை யாழ்ப்பாண நிருபராக வைத்திருக்கலாம்.

இவ்வாக்கத்தை நான் இவ்வளவு உறுதியாக எடுத்துரைக்க காரணம் நானும் இறுதிக்காலம் வரை இறுதிப் போர்ச் சூழலில் வாழ்ந்தவன் என்பதுடன் அரவணைப்போம் என்ற ஒரு சிறு முயற்சியால் என்னால் ஆனா உதவிகளை செய்தும் வருகின்றேன் என்பதனாலுமேயாகும். மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இவ்வாக்கமானது எந்தவொரு அரசியல் அமைப்பு சார்பாகவும் எழுதப்படவில்லை. பல ஈழ பெண்களை கேள்விக் குறியாக்கிய விகடனின் கேவலமான செயலுக்காகவே எழுதப்படுகிறது.

சரி விடயத்தை ஆராய்வோம் வாருங்கள்.

1. இவ்வளவு விலாவாரியாக ஒரு விபச்சாரியை பேட்டி கண்ட ஒரு அறிவு ஜீவி அவர் தடுப்புக்கு சென்ற போது அவரது குழந்தை வயதைக் கேட்கவில்லை.
(கேட்டிருந்தால் பல விடயங்கள் இவ்விடத்திலேயே பொய்யக்கப்பட்டிருக்கும்)

2. இறுதிப் போர் வரலாற்றில் 2 குழந்தைகளின் தாய் ஆயுதம் ஏந்தினார் என்பது பற்றி இது தான் முதலாவது செய்தியாகும்.

3. அப்பெண்ணுக்கு நலன்புரி முகாமில் குழந்தை பிறக்கவில்லை. அப்படியானால் மே மாத்திற்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும். அப்படியானால் உச்ச போர்ச் சூழலில் அவர் நிறைமாதக் கர்ப்பிணியாக அல்லவா இருந்திருப்பார். அந் நிலையில் அவர் ஆயுதம் ஏந்திப் போராடினார் என்பதை எப்படி நம்புவது?

4. ஒரு தளபதியை இவ்வளவு குறுகிய காலத்தில் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்து விட்டது என்பதை எந்த மடையனுமே நம்பப் போவதில்லை.

5. அவர் உடலை விற்றதற்கான காரணம் அழுத பிள்ளைக்கு முலையில் பால்வரவில்லையாம். இதற்கு ஒரு சாதாரண அடிப்படை மருத்துவ அறிவே போதுமானதாகும்.
சாதாரணமாக 4 அல்லது 5 நாட்கள் பால் கொடுக்காவிடிலே தாயிற்கு அதன் பின்னர் ஒழுங்கான முலைச் சுரப்பிருக்காது. அப்படியிருக்கையில் பல மாதங்கள் இருந்து விட்டு வந்தவருக்கு எப்படி பால் வரும்.
அதுமட்டுமல்லாமல் 6 மாத்திற்கு பின்னர் ஒரு குழந்தைக்கு தாகத்தைக் கூட தாய்ப்பால் தீர்க்காது என்பது அடுத்த தகவலாக இருக்கையில் இந்த பேட்டி நாடகத்தை எந்தப் பட்டியலில் சேர்ப்பது.

6. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள யாழ் புகையிரதநிலைய விபச்சாரத் தகவலானது சென்ற வருடக் கடைசியில் ரிஷி என்பவரால் இயக்கப்பட்டு வந்த வணக்கம் இணையத்தளம் என்ற தளத்தில் படங்களுடன் வெளியான செய்தியாகும் (இவர் தான் ஈழத்தை சாக்காக வைத்து இங்கிலாந்தில் பண மோசடி செய்து தலைமறைவானவர்). அதில் குறிப்பிடப்பட்ட பெண்கள் வன்னியைச் சேர்ந்த பெண்களல்ல. உண்மையில் அப்பெண்கள் அடையாளம் காணப்பட்டு நன்னடத்தைக்குட்படுத்தப்பட்டார்கள். அதன் பின்னர் சிறிது காலத்திலேயே அங்கு புகையிரத வீதிப் பணியாளர்கள் தங்க ஆரம்பித்து விட்டார்கள்.
இது அச்சம்பவத்தை ஆதாரத்திற்காக புகுத்தி புனையப்பட்டதாகும்.

7. அப்பெண் சிறிது காலத்தில் தன்னை விடுதலை செய்து விட்டார்கள் எனக் கூறினார். ஒரு போதும் இப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை அதுவும் ஒரு தளபதியானால் அவரை நீதிமன்றின் முன் தான் விடுதலை செய்திருப்பார்கள். காரணம் அவர் மீது குறைந்தது 20 குற்றங்களாவது சுமத்தப்பட்டிருக்கும்.
8. தன்னை முக்கிய மந்திரிகள் வன்முறைக்குள்ளாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். அந்த இடத்தில் அவர்கள் சுட்டிக்காட்ட நினைத்தது யாரை என்பது மறைமுகமாகவே பலருக்கு விளங்கியிருக்கும். சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும் ஒரு விடயம் என்னவென்றால் கையை கழுவி விட்டே தொட வேண்டிய அழகிகள் இருக்கையில் சவர்க்காரத்துக்கே வழியற்றிருக்கும் இவரை ஏன் ஒரு அமைச்சர் தேடி வந்து உறவு கொண்டு நோயால் உழல வேண்டும்.

மொத்தத்தில் விகடனும் அதன் நிருபரும் இப்பேட்டியில் மறைமுகமாக தமிழ்க் கூட்டமைப்பினர் மற்றும் இந்திய அரசியல்வாதிகள் கையாலாகதவர்கள் என்பதையும். யாழ்ப்பாணத்தில் யார் யார் விபச்சாரிகளை நாடிச் செல்கிறார்கள் என்பதையும் சொல்லாமல் சொல்லி தமது நோக்கத்தை அடைய முற்பட்டிருக்கிறது.

ஆனால் இதன் மூலம் இப்போதும் தடுப்பில் இருந்து வந்து சுய தொழில் செய்து முன்னேறத் துடிக்கும் பல பெண்களை சமூகத்தில் ஒரு தப்பான கண்ணோட்டத்திற்கு விகடன் தள்ளி விட்டது. நான் அறிய வீதி திருத்த வேலைக்கு போய் கல் அள்ளி வாழக்கையை ஓட்டுபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இடியப்பம் அவித்து விற்கும் ஒரு பெண் எம் அருகிலேயே இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் பல புலம்பெயர்ந்த உறவுகள் தனித்து நின்றே அவர்கள் முயற்சிக்கு உதவுகிறார்கள். ஒரு முறை சுவிற்சர்லாந்தில் அறிவிப்பாளராக இருக்கும் இணுவையூர் மயூரன் என்ற உறவு தனது குழந்தையின் முதல் பிறந்த நாளை நிறுத்தி அப்பணத்தை அப்படியே முகாமிற்கு கொடுத்தார்.
அதே போல் கனடாவில் உள்ள றஜி என்ற உறவு ஒரு இளைஞர் குழுவைத் திரட்டி வவுனிக்குளக் கிராமத்தில் உள்ள மக்களுக்கு தொழில் முதலீட்டு உதவியை வழங்கி வருகிறார்கள். அதே போல் நான் அரவணைப்போம் என்ற பெயரில் நடாத்தி வரும் என்னால் முடிந்த சேவைக்கு பல புலம் பெயர் உறவுகள் உதவி செய்கிறார்கள். (சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாகவே) இறுதியாகக் கூட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு சகோதரி ஒரு வன்னி மாணவனை அப்படியே பொறுப்பேற்று கல்வி கற்பித்து வருகிறார்.
இப்படி தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் அருள் இனியன் என்ற ஒரு நிருபரை வைத்து விகடன் ஆடியுளள இந் நாடகமானது ஒரு அப்பட்டமான பொய் என்பதை எந்தவொரு ஈழ மகனும் ஊகிக்க வெகு நேரமாகாது.
ஈழப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள இக் களங்கங்களை களைய இவ் வாதாரங்களை பலருக்கும் காட்டுங்கள்

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

update- உறவுகளே விகடனின் இந்த நடத்தையை எப்படிச் சொல்வது. இந்தப் படத்தை சொடுக்கி பெரிதாக்கிப் பாருங்கள். தயவு செய்து அவர் தொடர்பை ஏற்படுத்தித் தாருங்கள் நிச்சயம் உடனேயே ஏதாவது தொழில்வாய்ப்பளிக்க உடனே ஏற்பாடு செய்து தருகிறேன்.
இப்படி ஒரு பெண் உணமையாகவே இருந்திருந்தாலும் கூட அதை ஆராயாமல் வெளியிட்ட அந்த நிருபர் மிகவும் கண்டிக்கபபடவேண்டியவரே. காரணம் ஒரு மானமுள்ள பெண் வாழ எத்தனையோ வழியிருக்கையில் உடலை விற்றுப் பிழைக்கும் தேவை என்பது எவருக்குமே வராது. (முக்கியமாக இந்த இடத்தில் அவர் போரால் வேறு எந்த உடல் தாககத்திற்கும் ஆழாகவில்லை என்பது பற்றி குறிப்பிடப்படவே இல்லை. இதன் முலம் அவர் தேக ஆரோக்கியம் உள்ளவர் தான் என்பது புலனாகிறது)
.


முற்பகல் 7:17 - By ம.தி.சுதா 5

5 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top