Wednesday, 28 March 2012

என் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு

முற்குறிப்பு - இதை படித்து முடித்தவரிடம் ஒரு அன்பான வேண்டு கோள் படித்து முடித்ததும் 3 தரம் துப்பி (உமிழ்ந்து) விடுங்கள்
         ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருந்திருப்பாள் என்று சொல்வார்கள். இந்தக் கருத்தானது என் வாழ்க்கையில் 100 வீதம் நானே உணர்ந்து கொண்ட உண்மையாகும்.
     இன்று இந்தச் சமூகத்தில் கொஞ்சமாவது கௌரவத்துடன் நான் தலை நிமிர்ந்து நிற்பதற்கு அந்தப் பெண் தான் காரணம். எமக்கிடையே காதலா? நட்பா? பாசமா? என எந்த வரையறைக்குள்ளும் நான் அவரை உள்ளடக்க முடியவில்லை பல தடவைகளில் எனக்குச் சிறந்த பெண் நண்பியாகவே இருந்திருக்கிறார். இந்த உலகத்தில் இது வரை நான் எந்தவொரு பொய்யும் சொல்லாத ஒரே ஒரு ஜீவன் என்றால் என் அக்கா ஒருவர் தான். அதற்கான காரணம் பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் என்னை இன்றும் உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண சம்பவம் அது.
        நான் முதலாம் தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலம். பாடசாலையில் ஒரு நாள் ஒரு நண்பன் ஒரு அழி றேசர் (அழிப்பான்) ஐக் கொடுத்து மறு நாள் வந்து தரும்படி கொடுத்தான். நானும் அதை வீட்டுக்கு கொண்டு வந்து விளையாடி விட்டு மறுநாள் கொண்டு போய்க் கொடுத்தேன். ஆனால் அந்த அழிப்பான் அவன் இன்னுமொருவனிடம் திருடிய அழிப்பான் என்பது அப்போது தான் எனக்குத் தெரிந்தது. ஆனால் என் பையில் இருந்து அது பிடிபட்டதால் திருட்டு என்றால் என்னவென்று தெரியாத வயதிலேயே நான் திருடனாக்கப்பட்டு விட்டேன். இந்த விடயமானது என்னை பாடசாலைக்கு ஏற்ற வரும் அக்காவிடம் தெரிவிக்கப்பட்டது.
           அவர் ஒன்றுமே பேசவில்லை வீட்டுக்கு அழைத்து வந்து என்னிடம் திருடினாயா? எனக் கேட்டார் நான் இல்லை என்றேன். ஒன்றுமே பேசவில்லை எனக்கான சாப்பாட்டை ஊட்டி விட்டார் அதன் பின் குசினிக்குள் (சமையலறை) வைத்துப் பூட்டி விட்டாதுடன் கைவிளக்கையும் சத்தகத்தையும் (மரக்கறி வெட்டும் சிறிய ரக கத்தி) எடுத்துக் கொண்டார். சத்தகத்தை சிவக்கும் வரை சூடாக்கிக் கொண்டதன் பின்னர் தனது இடது கையில் நெடுக்காக ஒரு சூடு வைத்துக் கொண்டார். வெளியே வர முடியாத என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை இயன்றவரை கத்தினேன், கெஞ்சினேன். சத்தியம் கூடச் செய்தேன் எதையுமே அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மீண்டும் நெடுக்காக ஒரு முறை சூடு போட்டுக் கொண்டார். உண்மையில் அதற்கு மேல் என்னிடம் கத்துவதற்கு சக்தி இருக்கவில்லை. அப்படியே சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டேன். அப்போது அருகே வந்து என்னை தன் மடியில் கிடத்திக் கொண்டு சொன்னார் “நீ களவெடுத்ததற்காக நான் சூடு வைக்கவில்லை எனக்கு பொய் சொன்னதற்காகத் தான் இந்தத் தண்டனை” என்றார்.
                தப்புச் செய்யாமலேயே அன்று அவருக்குத் தண்டனை கொடுத்த அந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் என் கண்கள் என்னை அறியாமலேயே கலங்கிக் கொள்ளும். 20 வருடங்களாக அவரது தழும்பு இன்றும் என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது.
            அவர் என்னை வளர்த்த விதம் மற்றவர்களின் வளர்ப்பு முறையில் இருந்து பெரிதும் மாறுபட்டது. அம்மாவே அடிக்கடி கூறுவார் நான் பிறந்ததும் தனக்கு முதல் என்னைத் தூக்கிக் கொண்டது அக்கா தானாம். காரணம் எனது மாமனாருக்கு ஆண் பிள்ளைகளே இல்லை அதனால் என்னை அவர்களுக்குக் கொடுப்பது என முதலே ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டிருந்தது. ஆனால் அக்கா என்னைக் இறுதி நேரத்தில் கொடுக்க மறுத்து விட்டாராம்.
               எனது பல வெற்றிகளுக்காக அயராது உழைத்தவர். 4 ம் ஆண்டு படிக்கும் காலத்தில் தீவிர இருதய நோயால் பாதிக்கப்பட்டு நான் இருந்த காலத்தில் எனக்காக அவர் பட்ட கஷ்ரத்தை என்றுமே என்னால் மறக்க முடியாது. அதே போல் என்னை அவர் நோயாளி போல வளர்க்கவும் இல்லை. 3 வருடங்களாக தீவிர மருத்துவ கண்காணிப்பின் பின் மீண்டும் என்னை விளையாடத் தூண்டியவர் அவர் தான். 9 ம் ஆண்டிலேயே மாவட்ட தடகளப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற போது யாராலுமே அதை நம்ப முடியவில்லை. அவர் எனக்குத் தந்த நம்பிக்கை தான் இலங்கையின் தேசிய மட்ட தடை தாண்டல்ப் போட்டி வரை என்னை அழைத்துச் சென்றது. (அதில் பங்கு பற்றியிருந்தாலும் 2 ம் தெரிவுப் போட்டியுடன் வெளியேற்றப்பட்டு விட்டேன்).
             என்னை சிறந்த பேச்சாளனாக்க வேண்டுமென்பதற்காக உடுப்பிட்டியில் இருந்து கரவெட்டியில் இருந்த எனது மாமா உறவு முறை கொண்டவரான திரு ”வானம்பாடி” யோகராஜா (யாழ்ப்பாணத்தில் ஒரு பிரபல வில்லுப் பாட்டுக் கலைஞனாகத் திகழ்ந்த ஒருவர் விபரம் தொடுப்பில் உள்ளது - தொடுப்பு) அவர்களிடம் ஒவ்வோர் நாளும் அழைத்துச் செல்வார்.
              சிறுவயதில் நான் படித்த புத்தகங்களுக்கு அளவே இருக்காது. 5 ம் ஆண்டு படிக்கும் போதே அர்த்தமுள்ள இந்து மதம் அத்தனையும் படித்து முடித்துவிட்டேன்.
        நான் வேறு யாரையாவது தங்கச்சி என்று அழைத்தால் என் தங்கை கட்டாயம் பொறாமைப்படுவாள். ஆனால் நான் எத்தனை பேரை அக்கா என்றழைத்தாலும் அவர் பொறாமைப்பட்டதே இல்லை. கேட்டால் “நான் உனக்கு அம்மா தானே” என்பார்.
            அதே போல் எந்த வயது மூத்த பெண்ணாவது தம்பி என்றழைத்தால் அப்படியே அவர்களுடன் “அக்கா அக்கா”  என்று ஒட்டிப் போவது உண்டு. ஆனால் என்ன காரணமோ தெரிவதில்லை சிறிது காலத்தில் தாமாகவே விட்டுப் போய்விடுவார்கள். உடனே சாதுவாக வலிக்கும் ஆனால் அது என் அக்கா வாங்கி வந்த வரமோ என்ற நினைப்புத் தான் உடனே வரும். அவர்களின் பிரிவுக்கு காரணம் தேட நான் ஒரு போதும் முற்பட்டதில்லை காரணம் நான் வாழ்ந்த சூழலோ தெரியவில்லை எப்போதும் எதிர்ப்புகள், தடைகள் மற்றும் தனிமையைத் தான் நான் விரும்புவதுண்டு அதனால் என் உறவு வட்டங்களை எப்போதும் மட்டுப்படுத்திக் கொண்டே இருப்பேன் அதனால் இந்த வாடிய பூவில் இருந்து விழும் இதழ்களை நினைத்து நான் வருத்தப்படுவதில்லை எனக்கு காம்பாக அவர் இருக்கிறார் என்ற மனத்துணிவே எப்போதும் இருக்கிறது. ஆனால் இத்தனையும் தாண்டி சுஜா அக்கா, வினோதினி அக்கா, வேணி அக்கா இப்போது சதா அக்கா போன்றோர் எப்படி நிலைத்திருக்கிறார்களோ எனக்கு இது வரையும் புலப்படாத ஒரு மர்மமாகவே இருக்கிறது.
               மற்றவர் எதிர்பார்ப்புக்களை நான் பூர்த்தி செய்வதில்லை என்ற குறை என்னையே அடிக்கடி உறுத்தும். ஆனால் தொழில், படிப்பு, நேரம் இன்மை இவற்றுக்கிடையில் மற்றவற்றுக்குள் என்னால் என் மனதை வலுக்கட்டாயமாக புகுத்த விரும்பவில்லை. ஓய்வு நேரத்தில் எது என் நினைவுக்கு வருகிறதோ அது தான் எனது அப்போதைய பொழுது போக்கு. இதை முழுவதுமாக அறிந்த ஒரே ஜீவன் என் அக்கா தான். அதனால் தான் எமக்குள் இந்தளவு நெருக்கம்.
   இதை படித்து முடித்தவரிடம் ஒரு அன்பான வேண்டு கோள் 3 தரம் துப்பி (உமிழ்ந்து) விடுங்கள்.


27.03.2012 இன்று பிறந்த நாள் கொண்டாடும் எனது தங்கைக்கும்.


28.03.2012 நாளை பிறந்த நாள் கொண்டாடும் எனது மருமகனுக்கும்


29.03.2012 நாளை மறுதினம் பிறந்த நாள் கொண்டாடும் எனது அருமை அக்காவிற்கும் எனது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


ஆசிரியத் தொழிலில் இன்னும் பல சிறந்த மாணவரை உருவாக்கி பல முன்னேற்றஙகள் பெற என்றும் அவரை வாழ்த்தி நிற்கிறேன்.


நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா 

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

38 comments:

tamilvaasi said...

அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ..

tamilvaasi said...

நீங்கள் செய்யாத குற்றத்திற்கு சூடு... கடுமையான தண்டனை.

jgmlanka said...

சுதா, நெஞ்சை உருக்கிய பதிவு, அந்த அக்காவுக்கு முன்னால் எந்த அக்காவும் ஈடாகாதையா.. அவங்க சொன்னது போல..அக்கா அல்ல, அம்மா.. அந்த தாய்மை நிறைந்த சகோதரிக்கு என் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்..கூடவே.. ஒரு அருமையான தம்பியை உருவாக்கித் தந்ததற்காக என் நன்றிகளும்.. சொல்லிடுங்க...

jgmlanka said...

அக்காவுக்கும் மற்றயோருக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எல்லாரும் தனக்கு கிடைக்கவேண்டும் என கனவு காணும் அக்கா தங்களுக்கு கிடைத்திருக்கிறார்கள். கொடுத்து வைத்தவர் சுதா நீங்கள். சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்தைக் கூறி விடுங்கள்.

முகநூலில் அடுத்த வாரம் திருமணம் என்றுக் கேள்விப்பட்டேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

மற்றவர்களுக்கும் வாழ்த்தைத் தெரிவித்துவிடவும்.

அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அண்ணே உங்களது வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த வரம்...உங்கள் அக்கா...

இவர்கள் எல்லோரும் நீடூழி வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

எல்லோருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள் சகோ!

Gobinath said...

உங்கள் அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உங்கள் சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மக்கா...

உங்கள் சகோதரிகளுக்கு எனது இனிய‌ பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உன்மையிலேயே எனக்கு அக்கா இல்லை என வருத்தமாக உள்ளது.

நான் மூன்று தரம் துப்பி விட்டேன்.

போற்றுதலுக்குரியவர் தங்கள் சகோதரி....

வணக்கம் மச்சி,
நீண்ட நாளின் பின்னர் இந்தப் பக்கம் வாரேன்.

நல்லா இருக்கிறியா? முதலில் என்னடா இவன் மூன்று தரம் துப்பச் சொல்கிறானே என யோசித்தேன். அடக் கண்ணூறு படக் கூடாது என்று தானே சொல்லியிருக்காய் எனப் புரிந்து கொண்டேன்.

உன் எதிர்கால வாழ்வு வளம் பெற வேண்டும், நீ நல்ல பழக்கம் பழக வேண்டும் எனும் நோக்கில் தன்னையே வருத்தியிருக்கிறா உன் அக்கா..

மனதை நெகிழச் செய்யும் பதிவு நண்பா..

இப்படி எமக்கெல்லாம் ஓர் சகோதரி வாய்க்கலையே என ஏங்குகிறேன். (நல்ல வேளை இதை என் அக்கா படிக்க கூடாது)

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

அன்பு நிறை அக்காவிற்கும் மற்ற அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

வாழ்த்துக்கள்....

Unknown said...

நீங்கள் கொடுத்துவைத்தவர் மதி. கண்ணு படாமல் இருக்கட்டும் உங்கள் அனைவரின் மீது..

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

மற்றவர்களை நீங்கள் அக்கா எனும் போது கோபிக்காதவர், மற்றவர்களை தங்கை எனும் போது பொறாமை படுவது ஏன்?

Anonymous said...

அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....

Nalla acca

நெஞ்சம் மறவாத அக்கா நீடூழி வாழ்க உணர்ந்தவர்களுக்குத்தான் உறவுகள் புரியும்

உங்க தங்கா,மருமகன் மற்றும் அக்காவிற்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்களையும் கூறி விடுங்கள் அண்ணா...

//நான் வேறு யாரையாவது தங்கச்சி என்று அழைத்தால் என் தங்கை கட்டாயம் பொறாமைப்படுவாள்..//

ஓ அதுதான் என்னை நீங்கள் இப்போது அப்படி அழைப்பதில்லையா அண்ணா..?

//இந்த வாடிய பூவில் இருந்து விழும் இதழ்களை நினைத்து நான் வருத்தப்படுவதில்லை எனக்கு காம்பாக அவர் இருக்கிறார் என்ற மனத்துணிவே எப்போதும் இருக்கிறது//

நிச்சயமாக இது உண்மைதான் சகோதரா.உங்க எல்லாவித வெற்றிகளுக்கும் எப்போதும் உங்கள் அக்கா பக்கபலமாக இருந்து உங்கள் வாழ்வில் ஏற்றம் பெற என் நல்வாழ்த்துக்கள்.

அன்பு நிறை அக்காவிற்கும் மற்ற அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

//நான் வேறு யாரையாவது தங்கச்சி என்று அழைத்தால் என் தங்கை கட்டாயம் பொறாமைப்படுவாள்.//

உங்க தங்கையின் எண்ணத்தின் பின் ஏதும் ஓர் அர்த்தம் இருக்கும் சகோதரா.சிறிய மனது பெரிய கற்பனைகள் வளர்ப்பதற்குள் அவருக்கு எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள்.நிச்சயம் அவர் புரிந்துகொள்வார்.

Yoga.S. said...

வணக்கம் ம.தி.சுதா!அனைவர் பிறந்த நாளுக்கும் எனது வாழ்த்துக்களும்!!!இப்படி ஒரு வெறித்தனமான பாசம் வைத்திருக்கும் அந்த அக்காவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.அவர் பார்க்கும் கற்பிக்கும் தொழிலின் போது மாணாக்கனாக இருக்க முடிந்திருக்க வில்லையே என்று வருந்துகிறேன்!கண்ணூறு,நாவூறு(துப்பி)கழித்து விடுகிறேன்.உங்கள் அந்த"அம்மா"(அக்கா)வை முடிந்தால் பார்ப்பேன்,கண்களைக் குழமாக்கிய அந்தச் சகோதரியின் செய்கை வாழ்நாள் பூராவும் உங்களை வழிநடத்தும்.அவர் பல்லாண்டு,பல்லாண்டு நீடூழி வாழ வாழ்த்த வயதில்லை,எனவே வேண்டுகிறேன் வல்லானை!

Unknown said...

மனங்கசிந்த பதிவு!சுதா!
அக்காவுக்கும் அனைவருக்கும்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

புலவர் சா இராமாநுசம்

உங்கள் அக்கா வடிவில் இருக்கும் அம்மாவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள் சுதா...

உண்மையில் இப்படி ஒரு அக்கா கிடைக்க நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். எனக்கும் ஒரு அக்கா இல்லையே என்று ஏக்கம் தான்.....

அக்கா அல்ல, அம்மா.. அந்த தாய்மை நிறைந்த சகோதரிக்கு என் மனம் நிறைந்து வாழ்த்துகள்.
இப்படியான நல்ல தம்பியை உருவாக்கியமைக்கும் பாராட்டுகள்..
இருவரும் நீடுழி வாழ்க

ஆசிரியத் தொழிலில் இன்னும் பல சிறந்த மாணவரை உருவாக்கி பல முன்னேற்றஙகள் பெற என்றும் அவரை வாழ்த்தி நிற்கிறேன்.

Nathan said...

//அதனால் இந்த வாடிய பூவில் இருந்து விழும் இதழ்களை நினைத்து நான் வருத்தப்படுவதில்லை எனக்கு காம்பாக அவர் இருக்கிறார் என்ற மனத்துணிவே எப்போதும் இருக்கிறது. //

அருமையான வார்த்தைகள்... அன்பான அக்கா....

S Murugan said...

பதிவு அருமை. அன்பு, அறிவு, பாசம், நேசம் , பற்று கலந்த அருமையான அக்கா, உறவுகளின் உண்மை, உன்னதம் எல்லாம் வெளிப்பட்டிருந்தது. உங்களுக்கும் , அக்காவுக்கும் அன்பான வாழ்த்துக்குள். கடைசியில் படித்துவிட்டு "காரி துப்புங்கள்" என்று எழுதியிருந்தீர்கள். அது ஏன் என்று புரியவில்லை. அந்த வார்த்தை வேண்டாம் என்று தான் தோணுகிறது. உறவுகள் சிறக்கட்டும்; அதில் உன்னதம் பிறக்கட்டும்.

Unknown said...

உங்கள் அக்காவுக்கு வாழ்த்துக்களும்,வணக்கங்களும்!

உங்கள் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.
அக்காவுக்கு வணக்கங்கள்.

ADMIN said...

வாழ்த்துகள்..

Total Pageviews

Followers

என் குறும்படங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top