வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

அன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்

பிற்பகல் 4:41 - By ம.தி.சுதா 62


அன்பு அண்ணனுக்கு…
       நீங்கள் நலமா எனக் கேட்க முடியல நாங்கள் வழமை போல நலமே !
     உங்கள் வருகைக்காய் கோயில் வாசலில் தவம் கிடக்கும் அம்மாவுக்காகவாவது ஒரு முறை வந்து விட்டுப் போங்கள்.
     
முந்தியென்றால் ஒரு கறையான் கூட்டத்தைக் கண்டாலே தட்டி விட்டு கோழியை கூப்பிட்டு விடும் எனக்கு இப்போ அதை வளர்க்க ஆசைப்படுகிறேன். அதை தின்ன வரும் பல்லிகளாவது அம்மாவுக்கு அடிக்கடி ஆறுதல் சொல்லிப் போகிறது என்பதால் தான் அண்ணா.
      6 வயசில் பார்த்த மீசை முளைக்காத உங்கள் ஆசை முகம் மட்டுமே என் மனதில் இப்போதும் இருக்கிறது அண்ணா. ஆனால் இப்ப உங்களுக்கு நரைச்ச தாடி கூட இருக்காமே.
     கடைசியாகப் போகும் போது ஒரு பச்சை பலூனும் ஒரு வெள்ளை பலூனும் சற்குணம் கடையில வங்கியந்தியளே. அதில வெள்ளை பலூன் ஓட்டை என்றதும் மாற்றி வருகிறேன் என்றீர்களே. அந்த பச்சை பலூனும் அடுத்த நாளே வெடிச்சுப் போட்டுதண்ணா சற்குணத்திட்டை போய்க் கேட்டன் நீங்கள் தரவில்லை என்றார். நான் இப்ப பெரிய பொடியன் அண்ணா எனக்கு அந்த வெள்ளை பலூன் தேவையில்லை நான் கேட்க மாட்டன் தயவு செய்து வாங்கோ அண்ணா.
    செய்திகளில் ஏதேதோ சொல்லுறாங்கள் ஏதேதோ எழுதுறாங்கள். எப்படி என்னால வீட்டுக்காரரிட்டை மறைக்க முடியும்.
     செய்தி நேரங்களில் அடம் பிடித்துக் கிரிக்கேட் பார்க்கிறேன். எத்தனை நாளைக்குத் தான் பெத்தவங்களிட்டையும் வளத்தவங்களிட்டையும் பொய் பொய்யாக சொல்லுறது. அந்த வெள்ளை பலூன் வேண்டமண்ணா ஒருக்காலாச்சும் வந்திட்டுப் போங்கோ.
     மனசெல்லாம் வலியண்ணா சொல்லி ஆற ஒற்றை மனிசரில்லை. என் கண்ணில் ஒற்றைத் துளியை அவர்கள் கண்டாலே எல்லாமே போயிடும். கண்ணPர் தேங்கித் தேங்கியே என் கண்கள் வெடிக்க முதல் ஒருக்கால் அவரை அனுப்புங்கோ.
     வீட்டில இப்பவும் நீங்கள் கூப்பிடுவது போல “கடவுள்… கடவுள்” என்று தான் கூப்பிடுறார்கள். நான் சொல்வது தான் அவர்களுக்குத் தெய்வ வாக்கு, அந்த நம்பிக்கையை பொய் பொய்யாக சொல்ல வச்சு உங்களைக் கொண்டே பொய்க்க வச்சிட்டாங்கள் அண்ணா.
     நான் தான் வீட்டில கல் நெஞ்சுக்காரனாம் ஆனால் தேரை மேய்ந்த தேங்காய் போல உள்ளால கரைஞ்சு போயிட்டன். அண்ணா ஓடு கரையும் முன்னமாவது ஒரு தடவை வந்திட்டுப் போங்கள்.
    இவையெல்லாம் வார்த்தையால் சொல்லி அழ வேண்டிய வார்த்தைகள் அண்ணா. எனக்குத் தான் யாருமே இல்லையே.
  என் தொண்டைக்குள் வார்த்தைகள் தேங்கி வெடிக்க முன்னர் எழுத்தாலே சொல்லிக் கொள்கிறேன். நம்பிக்கையோடு இருங்கள் அண்ணா. அம்மா இன்று காலையும் சொன்னாவா 20 வருசமா தான் கும்பிட்ட கடவுள் உயிரோட தான் இருக்கிறாராம்.

ஆசையோடு காத்திருக்கும்..
அன்புத் தம்பி.
கையில் எஞ்சியுள்ள தங்கள் கடிதங்களில் ஒன்று.

About the Author

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director
View all posts by admin →

Share This Post

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

62 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

////செய்திகளில் ஏதேதோ சொல்லுறாங்கள் ஏதேதோ எழுதுறாங்கள். எப்படி என்னால வீட்டுக்காரரிட்டை மறைக்க முடியும்.
செய்தி நேரங்களில் அடம் பிடித்துக் கிரிக்கேட் பார்க்கிறேன். எத்தனை நாளைக்குத் தான் பெத்தவங்களிட்டையும் வளத்தவங்களிட்டையும் பொய் பொய்யாக சொல்லுறது. /// ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது..( ஆனால் யார் அந்த அண்ணா என்று தான் தெரியவில்லை!!

சுதா SJ சொன்னது…

கடிதம் மனசை கணக்கா வைக்குது
ஆனால் யார் அந்த அண்ணா என்றுதான் கண்டு புடிக்க முடியவில்லை பாஸ்

vanathy சொன்னது…

சுதா, மனம் கனக்கச் செய்யும் கடிதம். உங்கள் அண்ணவா?

காட்டான் சொன்னது…

வணக்கம் மாப்பிள உன்ர கடிதம் நெஞ்சை பிசைகிறது... ஆனா அண்ணன் யார் என்பதுதான் விளங்கவில்லை.... எங்களுக்கு அண்ணன் என்றாள் இரண்டு பதம்தானே...!!!???? தமிழர்களிடையே இப்போ அம்மா என்று சொல்வதைப்போல..

காட்டான் குழ போட்டான்....

பெயரில்லா சொன்னது…

மனசுக்கு மிக வேதனையாக இருக்கிறது..உங்கள் கஷ்டம் எனக்கு புரிகிறது...பெயரை சொல்லவில்லை..எனினும் புரியாமல் இல்லை.

ஆமினா சொன்னது…

மனதை கனக்க வைக்கிறது சகோ

ராஜா MVS சொன்னது…

ஒவ்வொரு வார்த்தையிலும் கவலைகளை சுமந்து வந்துள்ள கடிதம்.

ஆனால் யார் அந்த அண்ணா என்று தான் தெரியவில்லை! பாஸ்..

கவி அழகன் சொன்னது…

அண்ணன் ஒருநாள் நிச்சயம் வருவான் கவலைப்படாதே தம்பி

rajamelaiyur சொன்னது…

Very painful letter

ஆகுலன் சொன்னது…

அண்ணே யாரு தம்பி யாரு அண்ணா எண்டுதான் கண்டுபிடிக்க முடியவில்லை...அனால் கடிதம் கனக்க சொல்லுது......

மனதுக்கு கஷ்டமாக இருக்குது......ஒருநாள் விடியும்

மாய உலகம் சொன்னது…

மனது கனக்கவைத்த பதிவு அனுதாபங்கள் சகோ

Rathnavel Natarajan சொன்னது…

வேதனையாக இருக்கிறது.

அண்ணா நம்பிக்கையோடு காத்திருப்போம்.கடவுள் நம் வாழ்விலும் நிச்சயம் வழி காட்டுவார்.அண்ணனோடு நாம் ஒன்று சேர்ந்து வாழும் காலம் வெகு தொலைவிலில்லையடா.கண்ணுக்கெட்டிய தூரமே.நம் காத்திருப்புகள் நிச்சயம் நிறைவேறுமடா....

//இவையெல்லாம் வார்த்தையால் சொல்லி அழ வேண்டிய வார்த்தைகள் அண்ணா. எனக்குத் தான் யாருமே இல்லையே.//

ஏனடா நாமெல்லாம் யாரடா உனக்கு?

செங்கோவி சொன்னது…

காலம் ஒருநாள் மாறும்..நம் கவலைகள் யாவும் தீரும்!

நம்பிக்கை கொள்வோம்.

அந்த அண்ணா யாருங்க சகோ.... கடிதம் ரொம்ப சோகம்ப்பா..

அஹ்ஸன் சொன்னது…

ஹ்ம்ம் நல்லதோர் உணர்வு பூர்வமான கடிதம் மனசு கனத்து போச்சு .. பாசம் என்பது இது தான்

பதிவு அழகா இருக்கு..

மனம் கனக்கும் கடிதம்.

கோகுல் சொன்னது…

பதிவைக்கண்டு நாங்களும் கரைந்து விட்டோம்!

ராஜ நடராஜன் சொன்னது…

சகோ நிரூபனுக்கு நான் எழுதிய கடிதத்தை விட ஆதமாவின் குரலாக ஒலிக்கிறது உங்கள் கடிதம்.

நிரூபன் சொன்னது…

அன்பிற்குரிய சகோதரம்,

பெரு நெருப்பாய் மிளாசி எரிந்த தீயின் வழி போனவர்கள், திசையற்று நிற்கும் வேளையில்,
இன்று எஞ்சி எம் முன்னே தெரிவதெல்லாம் கண்ணீர் மட்டும் தான்.

காலவோட்ட மாற்றத்தில்,
கை விடப்பட்டவராக அவர்கள் மட்டுமல்ல?
தீர்ப்பின்றி எங்கோ ஓர் தேசத்தில் தத்தளிக்கும் உறவுகளும் அடங்குகிறார்கள்.
உனக்கு எத்தனை பெரிய மனது?
மனதினுள்ளே எவ்வளவு ரணங்களை ஒளித்துச் சாதாரண மனிதனாக எம்மோடு பழகுகிறாய்.

உன்னைக் கையெடுத்து வணங்குகிறேன்.

மேலும் எழுத எனக்குச் சக்தியில்லை!

அவன் பாதம் போற்றுகிறேன்.
வெகு விரைவில் அந்த தெய்வமகன் வீடு வருவான்!!

KANA VARO சொன்னது…

பதிவு புதுசா வித்தியாசமா இருக்கு சுதா,

Unknown சொன்னது…

மனம் கனக்கிறது! வழமையான உங்கள் எழுத்திலிருந்து வித்தியாசமான நடையில்....அருமை!

சாகம்பரி சொன்னது…

//தேரை மேய்ந்த தேங்காய் போல உள்ளால கரைஞ்சு போயிட்டன்.//இது போதாதா மனதின் வலியை சொல்ல. கடித இலக்கியம்?

எப்பூடி.. சொன்னது…

கடித்தத்தின் வலி புரிகிறது, யாருக்கு ? எதற்க்காக? என்பது புரியவில்லை, பலரும் நினைப்பதுபோல 'அண்ணன்' பொதுவானவராக எனக்குப் படவில்லை!!!!!!!

J.P Josephine Baba சொன்னது…

இந்த கடிதங்கள் எல்லாம் வாசிக்கும் போது காலம் கடிதம் எழுத்தையும் அழித்து விட்டதே என்று மனம் கனக்கின்றது. கடிதங்களில் மட்டுமே உணர்வுகளே இப்படி கொட்ட இயலும், அவ்விதத்தில் இந்த பதிவும் ஒரு உணர்வு பூர்வமான கடிதம்.வாசிக்க தந்தமைக்கு நன்றி!

Unknown சொன்னது…

உங்கள் கடிதத்துக்கு நிச்சயம் பதில் வரும்

அந்த அண்ணன் நிச்சயம் ஒரு
நாள் திரும்பி வருவார். கவலை
வேண்டாம்.

arasan சொன்னது…

நல்ல பதிலுடன் பதில் கடிதம் வரும் சகோ ...

K.s.s.Rajh சொன்னது…

உங்கள் அண்ணா திரும்ப கிடைக்க பிராத்திக்கும் உள்ளங்களில் நானும் ஒருவனாக இருப்பேன்.

சசிகுமார் சொன்னது…

பிரார்த்தனை செய்கிறேன் ஆண்டவனிடம்....

செல்வா சொன்னது…

என்ன சொல்லுறதுனு தெரியுதுங்க.. உங்கள் அண்ணா என்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது. விரைவில் திரும்பிவர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்..

நிகழ்வுகள் சொன்னது…

"புரிதலின் பின்" மீண்டுமொரு தடவை பதிவை படித்த பின் கண்கள் கலங்கி விட்டது..

நிச்சயமாக நல்ல செய்தியே வரும். நம்பிக்கைகள் வீண் போகாது.. இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

Unknown சொன்னது…

கடிதம் முழுமையாக வலி...அழுகை வர வைக்கும் எழுத்து...

Unknown சொன்னது…

நல்லதே ந்டக்கும்.என் முகமறியா அன்பு சகோதரா உன் வலி எனக்கு நன்றாக புரிகிறது.

மனசைக் கனக்க வைக்கும் நேசப் பதிவு.

மனதை கனக்க வைத்த பதிவு!

கார்த்தி சொன்னது…

:'( :'(

சுதா.. எனக்கு விபரம் தெரியும்.. காலம் கை கொடுக்கும் கவலை வேண்டாம்

பெயரில்லா சொன்னது…

வேதனையை பகிர்ந்தாலே சுமை பாதி ஆகும்...
உங்களுடன் முதல் அறிமுகமே... ஆறுதல் வார்த்தைகளாகிப்போனதே...
உங்கள் பிரார்த்தனைகள் பலிக்கும்... கண்டிப்பாக...

jgmlanka சொன்னது…

தம்பி சுதா,
உங்கள் அண்ணாவுக்கு எழுதிய மடலைக் கண்ணீரோடு வாசித்தேன். நெஞ்சு கனக்கும் வரிகள்….
கவலைப்படாதீர்கள்.. இதுவரை காத்த இறைவன் இனியும் கைவிட மாட்டார். நான் உங்களுக்காக.. உங்கள் சகோதரனுக்காக பிரார்த்திக்கிறேன்.
நம்பிக்கையைக் கைவிடாதீர்கள். உங்கள் வலி புரிகிறது… அம்மாவுக்காக கண்ணீரை மறைக்க வேண்டிய நிலையை நினைத்து வேதனைப் படுகிறேன்.
உனக்காக… உன் சார்பில் நான் கண்ணீ சிந்துகிறேன்…

யாரோ ஒருவன் சொன்னது…

உருக்கமான உங்கள் வார்த்தைகள் நெருக்கமான உறவின் பிரிவில்
வாடுவது புரிகின்றது... உங்கள்
வலியின் ஆழம் என் நெஞ்சை
சுடுகிறது... நடுநிசிப் பொழுதுகள்
நீண்ட நேரம் நிலைப்பதில்லை...
அந்த விடியற் காலைக்காக
உங்களுடன் வாடுவோம் நாங்கள்
உங்களுடன் பிறக்காத உறவுகள்....
உங்கள் நெஞ்ச சுமையை எங்களுடன்
பகிர்ந்தமைக்கு நன்றி.

ஸ்ரீதர் சொன்னது…

இதயங்கள் இணைந்து விட்டால் இடைவெளிகளால் என்ன செய்ய முடியும் நண்பரே!கண்களை நனையச்செய்யும் கடித வரிகள்.உங்கள் அண்ணாவின் கண்களிலும் படும்.நிச்சயம் வருவார்.கலங்க வேண்டாம் நண்பரே!

Prabu Krishna சொன்னது…

மன்னிக்கவும் சகோ எனது இல் உங்கள் பதிவு வரவில்லை. எனவேதான் படிக்கவில்லை.

மனம் கனக்கிறது. உங்கள் வார்த்தைகளே சொல்லுகிறது உங்கள் வேதனையை. நிச்சயமாய் திரும்பி வருவார் நம் அண்ணன்.

Unknown சொன்னது…

கையறு நிலையில் எழுதி இருக்கிறீர்கள் சுதா, கடிதம் மனம் கனக்கச்செய்கிறது..

எம்மால் ஆனா உதவிகள் செய்கிறோம்..

சார்வாகன் சொன்னது…

மனம் கனக்கிறது.

காட்டான் சொன்னது…

மன்னித்துக்கொள்ளுங்கள் சுதா உங்கள் கடிதத்தின் பொருள் விளங்காததற்காக இப்போதுதான் நிரூபனின் பதிவை பார்த்து புரிந்துகொண்டேன்..

Unknown சொன்னது…

மன்னிக்கவும் சுதா இன்றுதான் புரிந்துகொண்டேன் நிரூபனின் பதிவிலிருந்து...என்ன சொல்வதென்றே தெரியவில்லை!

தனிமரம் சொன்னது…

கடிதம் யாருக்கு என்பதைப் புரிந்த போது மனசு கரைபுரண்ட வெள்ளம்போல் துடிக்கின்றது நல்லதே நடக்கும் தாயின் கடவுள் நம்பிக்கைபோல்!

ஆகுலன் சொன்னது…

அண்ணா பதிவை அன்று வாசிக்கும் போதே மனம் கனத்தது......இன்று திரும்ப திரும்ப வசிக்கிறேன்.. உங்களை நினைத்து பெருமை படுகிறேன்...ஆறுதல் கேட்கும் நிலையில் நீங்கள் இல்லை ..என்னால் அதை தவிர ஒன்றும் செய்ய முடியாது...

நல்லது நடக்க பிரார்த்திப்போம் நண்பா கலங்காதே....

சாமக்கோடங்கி சொன்னது…

உங்களுடைய இந்த நிலை என் எதிரிக்குக் கூட வரக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.. மனம் தளராதீர்கள் நண்பரே.. உங்களுக்கு எவ்விதத்தில் ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை..

sarujan சொன்னது…

சுதா இன்றுதான் புரிந்துகொண்டேன் நிரூபனின் பதிவிலிருந்து.. மனம் தளர வேண்டம். நல்லது நடக்க பிரார்த்திக்கிறேன்

sarujan சொன்னது…

சுதா இன்றுதான் புரிந்துகொண்டேன் நிரூபனின் பதிவிலிருந்து.. மனம் தளர வேண்டம். நல்லது நடக்க பிரார்த்திக்கிறேன்

Unknown சொன்னது…

பாதி படிக்கும் போதே தொண்டையைக் கட்டிக் கொண்டு கண்கள் குளமாகின்றது.யாரோ சம்மதம் இல்லாதவனுக்கே இந்த வலி என்றால் இரத்த உறவுகளின் வலி.............

திடமாய் இருங்கள்.
நீதி தோற்கக்கூடாது,தோற்றால் அது அந்தப் பூமிக்குத்தான் சாபம்.

நாத்திகனாகிய எனக்கு யாரைக் கூப்பிடுவதேன்று தெரியவில்லை.

vidivelli சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
vidivelli சொன்னது…

அன்பு உறவே..
தாங்கவே முடியவில்லை இந்த கொடுமையை .நித்தமும் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.மனதை தளர விடாதேங்கோ சகோதரனே.எங்களுக்கே இப்படி ஜீரணிக்க முடியாமல் இருக்குதென்றால் உங்களுக்கு,உங்கள் குடும்பத்துக்கு எப்படி இருக்கும்.எப்படி இருப்பார்கள்..ஐயையோ கொடுமையிலும் கொடுமை....
யாரிடம் போய் சொல்லியள.நீதி.நியாயம் செத்து விட்டதே...தைரியமாக மனதை உடையவிடாமல் இருங்கோ..கடவுளை கெஞ்சிக்கேட்கிறேன்..
கடிதத்தை வாசிக்கும் போது அழுகையே வந்து விட்டது. உங்கள் அந்தரிப்பு புரிகிறது.அம்மாவை யோசிக்க விடாமல் தேற்றிக்கொண்டு இருங்கோ.

கூடல் பாலா சொன்னது…

Don't worry we are with you..

M.R சொன்னது…

இக்கடிதம் படித்ததும் ,கண்களில் கண்ணீருடன் மனதினில் வேதனை வருகிறது சகோதரா .

தங்கள் சோகம் நீங்கும்.

அமைதி அப்பா சொன்னது…

//இக்கடிதம் படித்ததும் ,கண்களில் கண்ணீருடன் மனதினில் வேதனை வருகிறது சகோதரா .//


//நாத்திகனாகிய எனக்கு யாரைக் கூப்பிடுவதேன்று தெரியவில்லை//

*******************

எல்லோருடைய உணர்வுகளும் ஒரே மாதிரி உள்ளது.

உமர் | Umar சொன்னது…

உங்கள் தளத்தில் அநேகமாக இதுதான் எனது முதல் பின்னூட்டம் என்று நினைக்கின்றேன். (நான் முன்னர் கும்மி என்னும் பெயரில் பதிவுகள் எழுதி வந்தேன்)

மூவர் உயிர் காக்கும் போராட்டங்கள், தமிழகத்தில் நடைபெற்று வருவதை பற்றி அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன். அது தொடர்பாக உங்களுடன் சில விஷயங்களில் தெளிவு பெற வேண்டியுள்ளது. எனக்கு ஒரு மின்னஞ்சல், mefromchennai@gmail.com என்னும் ஐடிக்கு அனுப்புங்களேன். உரையாடுவோம்.

(உங்கள் மின்னஞ்சல் முகவரி தெரியாததால் இங்கே பின்னூட்டமிட்டுள்ளேன்.)

Nila Loganathan சொன்னது…

அழுகையும், கெஞ்சலும்
இன்றைக்கு பலித்தாகிவிட்டது.
இந்தக் கடிதத்திற்கும் காலம் போய்விட்டது.

இணைந்திருக்கும் குடும்பத்திற்கும், இக்கடிதத்திற்கு தேவையில்லாத ஒரு வாழ்க்கைக்கும் நிறைந்த வாழ்த்துக்களும்,நம்பிக்கைகளும் சுதா அண்ணா :) :) :)


நிலா லோகநாதன்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்

back to top