Featured Articles
All Stories

Monday, 10 April 2017

மணிரத்தினமும் இராவணனும்...

வணக்கம் உறவுகளே
நலம் எப்படி?

மணிரத்தினம் என்றால் படுபயங்கரமான நுண்ணரசியல் படம் எடுப்பார் எம்மை அறியாமலே எமக்குள் ஏதாவது விதைத்திருப்பார் என்ற விமர்சனங்களோடு அவரைக் கடக்க நேரிட்டாலும் ஒரு இயக்குனராக, ஒரு ஆசானாக அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.


இத்தனை விமர்சனங்களும் எனக்குள்ளும் உண்டு ஆனால் என் ஒற்றை நாயகனை வைத்து என் வாயை ஒரு தடவை முழுவதுமாய்க் கட்டிப் போட்டார்.


விக்ரம் ரசிகன் என்பதற்கப்பால் விக்ரமுக்கூடாக நான் கற்பனையில் வைத்திருந்த இராவணன் என்ற என் நாயகனைக் காட்டியிருப்பார்.


இல்லாத பொல்லாதது எல்லாம் வைத்து கம்பன் வம்பளக்க உருவகம் கொடுக்கப்பட்ட பாத்திரமாகவே இன்றும் இராவணன் எமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால் அந்தளவுக்கு இராவண எதிர்ப்புக் கொண்ட ஒரு வட தேசத்துக்கு அவனைக் காட்டியதில் கூட ஒருவகை நுணுக்கமான நேர்மைத் தன்மையைக் கடைப்பிடித்திருப்பார்.


தங்கையை ஒருவன் வஞ்சம் தீர்த்தான் என்றதற்காக இன்னொருத்தன் மனைவியைக் கடத்தலாமா எனத் தான் ஒவ்வொரு இராமாயண வாசகர்களும் கேட்பார்கள். அது பற்றி தாராளமாக பல பட்டிமன்றங்கள் வாதிட்டு விட்டது அது ஒரு பக்கம் இருக்கட்டும் சரி கடத்தி வந்தவன் நடத்திய விதத்தைக் காட்டிய இடத்தில் மணிரத்தினத்தின் கண்ணியத்தை நான் மதிக்கிறேன்.


- அவள் விபத்தில் சிக்கி விட்டாள் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் தொடலாமா வேண்டாமா என்ற மனக் குழப்பத்துடன் இராவணன் இருக்கிறான் முனையவும் நினைக்கிறான் ஆனால் தொடுவதற்கான சந்தர்ப்பத்தை இயக்குனர் கொடுக்கவில்லை அவள் விழித்துக் கொள்கிறாள் தடியால் காப்பாற்றுகிறான்.- அவளுக்கு இவனில் வந்த கோபத்தில் தாக்க முனைகிறாள். அந்த இடத்தில் சராசரி ஆணாக இராவணன் நிற்கிறான். அவள் ஆக்ரோசம் கொண்டு பாய இவன் விலத்த அவள் கூந்தல் மட்டும் இவனை பட்டும் படாமல் தட்டிச் செல்கிறது. அந்த இடத்தில் அவனுக்குள் ஆணாக ஒரு உணர்வு எட்டிப் பார்க்கிறது என்பதை இசை உணர்த்தும் அந்த இடத்தில் இராம ரசிகருக்கு சபலம் என்ற வாரத்தையாலும் இராவணன் ரசிகருக்கு காதல் என்ற வார்த்தையாலும் அந்த உணர்வை அடையாளப்படுத்தலாம் ஆனால் அந்த இடத்திலும் இயக்குனர் இராவணனைக் காப்பாற்றி விடுகிறார். அவளைத் தடுக்கி தன் மேல் விழ வைத்திருக்கலாம் தானே போரிடுகையில் அணைத்திருக்கலாம் ஆனால் இராவணன் தன் உணர்வெழுச்சியை அடக்கியவனாகவே அடுத்தடுத்த காட்சிகளில் தோன்றுவான்.


- இத்தனை இடங்களிலும் அவளைத் தொடாமல் காத்து வந்த மணிரத்தினம் ஒரே ஒரு இடத்தில் அவளை தொட வைத்து விடுவார். அந்த அழுத்தமான தொடுகை அல்லது உரிமையான தொடுகையில் இராவணன் நாயகனாகவும் இராமன் தன் மனைவியில் கூட இரக்கமற்ற, பணயம் வைக்கும் கொடூரனாகவும் ஒரு காட்சியிலேயே விழித்து முடித்திருப்பார். இராவணனைச் சுட பொலிசார் சுற்றி வளைத்து விட்டார்கள். தன் மரண நாழிகையை கண் முன் அவன் கண்டு விட்டான் ஆனால் தன் முன்னே அவள் நிற்கிறாள். அவளைக் காப்பாற்ற வேண்டிய ஏதோ ஒன்று அவனுக்குள் இருக்கிறது. தன்னை அறியாமலே அவள் தலையை கீழ் நோக்கி அழுத்தி அவளை முதன் முதல் தொடுகிறான்.


இராவணனின் இறுதிக் கணத்தில் அவள் ஒரு பார்வை பார்ப்பாள் அவனும் பார்ப்பான் ஆனால் அவளது பார்வை சொல்லும், அதற்குள் பாசம் வழியும் அதை காதலாக என்னால் விழிக்க முடியாது ஆனால் அவள் கண் சொல்லும் நீ நல்லவன், வல்லவன் என இந்த உணர்வை அப்படியே எனக்குள் கொடுத்த மணிரத்தினத்திடம் இதை விட பெரிதாக என்னத்தை நாம் கற்று விட முடியும்.
அந்த இடத்தில் அவள் பக்கம் பக்கமாக வசனம் பேசவில்லை ஆனால் ஒரு வில்லனை எல்லோருக்கும் நாயகனாக்கியிருப்பாள்.குறிப்பு - (கார்த்திக் வருவது குரங்குச் சேட்டை விடுவது எல்லாம் படு கேவலமான இடம் ஆனால் இங்கு இராவணன் பற்றி மட்டுமே பேசப்படுகிறது.)

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

தொடர்ந்து என் பதிவுகளுடன் இணைந்திருக்க கீழ் இருக்கும் பேஸ்புக் like பொத்தானை சொடுக்கிச் செல்லவும்.
20:43 - By mathi sutha 0

Monday, 16 January 2017

டயலொக் வலையமைப்பின் பகல் கொள்ளையும் இலங்கை நுகர்வோர் சட்டங்களும்

வணக்கம் உறவுகளே...

இலங்கை என்பது நல்லாட்சியும் நீதி நிர்வாகங்கள் காக்கப்படும் ஒரு நாடாகவும் நல்லதொரு விம்பம் உருவாக்கப்பட்டக் கொண்டிருந்தாலும் மேல் தட்டு வர்க்கத்துக்கு கிடைக்கும் தனிமனித அடிப்படைச் சுதந்திரங்கள் அடித்தட்டு மக்களுக்கு மட்டுமல்ல நடுத்தர மக்களுக்கும் கிடைப்பதில்லை.


குறிப்பிட்டுச் சொல்லப் போனால் நுகர்வோர் தொடர்பான பாதுகாப்புச் சட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பான சட்டங்கள் இருந்தாலும் அது எந்தளவுக்கு ஒரு நுகர்வோனுக்கு உதவுகிறது என்ற கேள்விக்கு என்ன பதில் கிடைக்கப்போகிறது.

இன்று எந்தக் கடையில் போய் பொருள் வாங்கினாலும் 10 ரூபாவிற்கு மேற்பட்ட மிகுதியானால் மட்டுமோ காசாகக் கிடைக்கும் அதற்கு கீழ் என்றால் உதிரியாகத் திணிக்கப்பட்ட பொருட்களாக இருக்கும். பத்து ரூபாய் என்றால் தீப்பெட்டியும் ஐந்து ரூபாய் என்றால் ஏதாவது ஒரு உயர் சீனிப்பண்டமாக இருக்கும். இந்தச் சில்லறை விடயத்தில் சட்டத்தை இறுக்கத் தவறுவதால் பழக்கமற்றவனைக் கூட சொக்லேட் சாப்பிடப்பழக்குவதுமில்லாமல் இலங்கை அரசாங்கமே தனது சலரோக நோயாளருக்கான மருத்துவச் செலவை அதிகரித்துக் கொள்கின்றது.

வாகனம் வைத்திருக்கும் ஒவ்வொருத்தரும் 3rd party இன்சூரன்ஸ் கட்டாயம் கட்ட வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அது கட்டத் தவறி சில நாட்கள் கடந்தால் கூட நீதிமன்றம் வரை செல்ல வேண்டியதுடன் தண்டப்பணமாக 25 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டி வரும். இந்தக் காப்புறுதியின்படி யாராவது ஒருவரை அவ்வாகனம் தாக்கினால் கூட அவருக்கான காப்பீடாக அது கருதப்பட்டாலும் இதுவரை யாருக்காவது அப்படிக் கிடைத்திருப்பதாக தகவல் இல்லை. ஆனால் பல வழக்கறிஞர்கள் கூட பாதிக்கப்பட்டிருப்பினும் இதைக் கண்டும் காணாமல் விடுவதை அறிவுசார் விடயமாக கருத முடியவில்லை.

நேற்று டயலொக் மற்றும் மொபிடல் உடைய கட்டணப்பட்டியலைப் பார்க்க நேர்ந்தது. அதில் பார்த்தால் மொபிடலை விட டயலொக்கின் அரச வரிகள் மிக அதிகமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் அறிவிக்கும் போது பொதுவான அரச வரிகள் தான் அறிவிக்கப்படும். அப்படி இருக்கையில் எப்படி வலையமைப்புக்கு வலையமைப்பு அரச வரிகள் மாற முடியும். மொபிடல் என்பது அரசுசார் வலையமைப்பு என்றாலும் தனியார் வலையமைப்புக்கு வரி வீதம் அதிகம் என்று அறிவிக்கப்படவில்லையே.ஆக மொத்தத்தில் நாம் (நானும்) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பற்றி முழுமையாக தெரியாமல் இருப்பதால் தான் யாரோ ஒரு முதலாளித்துவ வர்க்கத்துக்கு அநியாயமாகப் பணத்தை தாரை வார்த்துக் கொண்டிருக்கிறோம். ஊடகங்கள் இச்சட்டங்களை அடிமட்ட மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகும். எல்லா ஊடகத்தினதும் 90 % க்கு மேற்பட்ட பக்கங்களை அரசியலும் கேளிக்கையும் தான் நிரப்புகிறதே தவிர அத்தியாவசியம் நிரப்பவில்லை.

மேலே நான் குறிப்பிட்டவற்றில் கூட நான் அறியாத நுகர்வோர் சட்டத்திற்குள் அடங்கிய ஏதாவது இருக்கலாம். தெரிந்தால் எனக்கும் சுட்டிக் காட்டுங்கள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா

மிச்சக்காசு பிரச்சனை ாடர்பாக நான் இயக்கிய குறும்படத்தை இங்கே காணுங்கள்.


20:39 - By mathi sutha 1

Tuesday, 27 December 2016

என்னுடைய முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் உங்கள் பார்வைக்கு

வணக்கம் உறவுகளே...

தொழில்நுட்ப வளங்களை முழுமையாக அடையாத என் மண்ணில் இருந்து தயாரிப்பாளரும் கிடைக்காத நிலையில் என்னிடம் இருந்த வளம் சினிமா அறிவு என்பவற்றை வைத்து “உம்மாண்டி“ என்ற இந்த முழு நீளத் திரைப்படத்தை முடித்து அதன் முன்னோட்டத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
இதை கிளிக் செய்து உங்கள் பேஸ்புக்கிலும் பகிர்ந்து மற்றைய நண்பர்களையும் சென்றடைய உதவுங்கள்.

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா


20:44 - By mathi sutha 2

Tuesday, 15 November 2016

இதுவும் என்னுடைய காதல் கதைகளில் ஒன்று தான்....

ஜேர்மனிய இயக்குனர் அலெக்சான்டர் ரைடர் ஆல் MRTC யில் நடாத்தப்பெற்ற ஆவணப்பட செயலமர்வு ஒன்றில் பங்கு பற்றும் சந்தர்ப்பம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்தது.
தெரிந்தோர் தெரியாதோர் என பலர் கலந்து கொண்டார்கள். அதில் பேஸ்புக்கில் சில மாதங்களாக நண்பியாக இருந்த அவளையும் கண்டேன்.
கண்டதும் ஒரு புன்னகை மட்டும் தான் இருவருக்குள்ளும் கடந்து கொண்டது. முதல் நாளின் மதியமும் கடந்த நிலையில் பேசிக் கொள்ளவில்லை.
நான் திரும்பும் நேரம் எல்லாம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ட கடனுக்காக ஒரு புன்னகை மட்டும் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் திரையிடப்பட்ட திரைப்படத்துக்குள் புகுந்து கொண்டேன்.
முதல் நாள் வகுப்பு முடிந்து அனைவரும் வெளியே வந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டு இருந்தோம். என்னோடு சேர்ந்து வந்திருந்த ஜனகன், மதீசனுடன் பேசிக் கொண்டிருக்கையில் தான் கவனித்தேன் என் அண்மையில் அவள் நின்றாள்.
எனக்காகவே காத்திருப்பது போல இருந்தது.
நேருக்கு நேர் பார்த்தேன்..
”உங்களோட ஒருக்கா கதைக்கோணும்”
”என்ன சொல்லுங்கோ” சற்று விலத்தி ஒதுங்கிக் கொண்டோம்.
பேஸ்புக்கில் இருந்தாலும் இன்பொக்ஸ் இல் கூட பேசியதாக நினைவில்லை. அப்படி என்ன பேசப் போகிறாள் வியப்போடு நின்றேன்.
அவள் மௌனம் நேரத்தோடு பேசிக் கொண்டிருந்தது. நானே தொடங்கினேன்.
”என்ன சொல்லுங்கோ”
தட்டுத் தடங்கித் தொடங்கினாள்.
”உங்களை மாதிரி எனக்கொரு அண்ணா இருந்தவர், உங்களை அண்ணா என்று கூப்பிடலாமா”
அவள் கலங்கிய கண்களும் வார்த்தைகளைத் துப்பத் தெரியாத உதடுகளும் என்னை உறுத்தியது.
வழமை போல் அதே புன்னகையால் சமாளித்துக் கொண்டு அது யாரெனக் கேட்டால் அதுவும் அதிர்ச்சியாகவே இருந்தது. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் என நினைக்கிறேன். மழைகால நேரம் குஞ்சர் கடைப் பகுதியில் ஏற்பட்ட பிக் அப் வாகன விபத்து ஒன்றில் தவறியிருந்தார். அதை நான் நேரில் சென்று பார்த்தும் இருந்தேன்.
அன்று ஆரம்பித்த அந்த உறவு என் திரைக்குழுவுக்கும் வந்து அவள் இயக்கத்தில் நானும் ஜனகனும் நடித்தது மட்டுமல்லாமல் ”நிழல் பொம்மை” என்ற அக் குறும்படத்தின் மூலம் திறந்த வசனகர்த்தா விருதும் பெற்றுக் கொண்டாள்.
அண்டைக்கு பிடிச்ச சனியன் இண்டை வரைக்கும் கழருதே இல்லை பார்ப்போம் அடுத்த புரட்டாதிச் சனிக்காவது ஏதாவது மாறுதா என்று (எடியேய் உன் கலியாணத்தைச் சொன்னன்ரி தங்கா (மதுசா) <3 span=""> )

நன்றிச் செதுக்கலுடன்
அன்புச் சகோதரன்
மதிசுதா
21:03 - By mathi sutha 1

Sunday, 21 August 2016

அவளைப் பிரசவித்தேன் - என் பத்திரிகைக் குறுங்கதை

அவளைப் பிரசவித்தேன்
நன்றி - தினக்குரல்

அவளைப் பிரசவித்தேன்….


காரை நான் தான் ஓட்டிக் கொண்டிருந்தேன். நித்தியா வின் வலி வெளிப்பாடுகை சற்று அதிகமாகிக் கொண்டிருந்தது.
”தம்பி இன்னும் கொஞ்சம் வேகமா போறிங்களா” சொன்னது மாமி.
பின் இருக்கையில் பற்களை இறுக்கிக் கடித்தபடி மாமியின் கைகளை இறுகிப் பற்றிக் கொண்டு நித்தியா கத்திக் கொண்டிருந்தாள்.
“வருண் ப்ளீஸ் வேளைக்கு போடா”
வேகமாகவே போய்க் கொண்டிருந்தேன் என்று சொல்ல முடியாது தான் வழமையை விட சற்று வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தேன். நித்தியாவுக்கான படபடப்பு ஒரு பக்கம், பாதைக் கவனிப்பிலான படபடப்பு ஒரு பக்கம் என என் மூளை உச்ச வேலையில் இயங்கிக் கொண்டிருந்தது.
முதலாவது குத்து எழும்பும் போது தான் மாமி எனக்கு போன் பண்ணியிருந்தார். நித்தியாவின் பெரு மூச்சொன்று பின்னுக்கிருந்து கேட்டது. இரண்டாவது குத்தும் கடந்து விட்டாள் என்பதை ஊகித்துக் கொண்டேன்.
இருவரும் அவசரப்படுத்துகிறார்கள் என்பதற்காக என் நிதானத்தில் இருந்து நான் தவறத் தயாரில்லை.
வாசலுக்குள் காரை நுழைக்கிறேன் தள்ளு வண்டிலுடன் ஊழியர் தயாராகிக் கொள்கின்றான்.
“மாமி நீங்கள் சேர்ந்து போங்கோ நான் bag எடுத்திட்டு வாறன்”
அடுத்த குத்துக்கு முதல் போக வேண்டும் என்ற அறிவுறுத்தல் நித்யாவுக்கு தெரியும் ஆனால் நான் பையுடன் வர பிந்தி விடுமோ என்ற ஒரு ஏக்கப்பார்வை ஒன்றுடன் நகரும் கதிரையில் போய்க் கொண்டு இருந்தாள். மணிரத்தினம் படத்தில் ரயில்களுக்கூடாகக் கடக்கும் நகரும் கமரா போல அவள் பார்வை என்னையே சுற்றிக் கொண்டிருந்தது.
ஆசுவாசமாய் கண்களாலேயே நான் வருகிறேன் என சின்ன சைகை கொடுத்தேன். சின்னதாய் ஒரு புன்னகை அவள் உதடுகளில் வெளிப்பட்டது. அடிக்கடி பார்த்தலுத்தது தான் ஆனாலும் அந்த புன்னகையில் இருக்கும் காந்த ஈர்ப்பு ஒன்று இழுத்தே தீரும்.
நான் பையைக் கொடுத்து விட்டு அறையின் வாசலில் காத்து நிற்கிறேன். உள் பதிவு வேலைகள் முடித்துக் கொண்டு அதே கதிரையில் அவளை இருத்தி லேபர் அறைக்கு அழைத்து போக வெளியே வந்தார்கள். அருகே வந்து கதிரையை நிறுத்திய மருத்துவமாது file எடுக்க என நினைக்கிறேன் உள்ளே போனார்.
“வருண் பிரச்சனை ஒன்றும் வராது தானே”
”ச்சே என்ன பழக்கம் குழந்தை மாதிரி” நித்தியாவை தேற்ற நான் சொல்லிக் கொண்டாலும் அவளின் விடயத்தில் நான் தான் அதிகம் பயந்தவன்.
”சீசர் அப்படி எதுவும் செய்வாங்களா”
”இல்லடி உனக்கு குழந்தை சரியா தானே இருக்கு பயப்பிடாதை”
”இல்லை ஏதோ ஒரு பயம் இருக்கு, pray பண்ணுறியா ”
தலையசைத்துக் கொண்டேன். என்னிடம் அவள் ஒன்றை உரிமையுடன் கேட்கிறாள் என்றால் ஒன்றில் என் குழந்தையாகக் கேட்பாள் இல்லை கண்டிப்புடனான என் தாயாகக் கேட்பாள்.
அவள் கதிரையின் கை பிடியை விரல்களால் சுரண்டிக் கொண்டாள். அவளுக்கு என்னில் எவ்வளவு தான் உரிமை இருந்தாலும் என் அன்பையோ ஸ்பரிசத்தையோ கேட்டுப் பெற்றுக் கொண்டதில்லை. கதிரைப் பிடியுடன் அவள் கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டேன்.
தலைமுடி இழுத்து ஒரு துணியால் கட்டப்பட்டிருந்தது. அவள் வழமைக்கு இது எடுப்பில்லைத் தான் ஆனாலும் அவளது அழகிய நெற்றி எல்லாக் குறையையும் ஈடு செய்திருந்தது.
மறு கையால் தலையை மெதுவாய் வருடி விட்டுக் கொண்டேன்.
என் கண்கள் எதை? எப்போது? எப்படி? பார்க்கிறது என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த சூட்சும ரகசியமாகும். விளங்கிக் கொண்டவள் மீண்டும் ஒரு புன்னகை உதிர்த்தாள். அவளுக்கும் தெளிவாகவே தெரிந்தது தான் அவள் எப்போது எந் நிலையில் இருந்தாலும் அதில் ஒன்றையாவது அழகாய் நான் ரசிப்பேன்.
அறைக்குள் கதிரை செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றேன். மாமியும் பட படப்புடன் என்னுடனேயே நின்று கொண்டார்.
சில நிமிடங்கள் கடந்திருந்தது.
ஆழமாய் ஒரு வலிக்குரல் கேட்க ஆரம்பித்தது.
ம்ம்.. நித்யா தான். என்னால் கேட்க முடியவில்லை. மாமிக்கு அனுபம் என்பதால் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தார்.
எனக்கு இப்போது எந்தக் கடவுளை கேட்பது என்று தெரியவில்லை. கல்யாணத்துக்கு முதல் வரை தேவையானதை கடவுளிடமே கேட்டேன். நித்தியா வந்த பிறகு அவளிடம் மட்டும் தானே கேட்டுப் பெற்றுக் கொண்டேன். அவளுக்காக கேட்க சொன்ன போதும் அவள் தான் நினைவுக்குள் நின்றாள்.
கைகள் எல்லாம் பட படக்க ஆரம்பித்திருந்தது. காட்டிக் கொள்ளவும் முடியவில்லை. கல்யாணத்துக்கு பிறகு கூட நித்தியா என்னிடம் அழுதிருக்கிறாள் தான் ஆனால் இப்படி அழுவதை முதன் முதல் என்னால் கேட்க முடியவில்லை.
”தம்பி கொஞ்சத்துக்கு வெளிய போய் நிண்டுட்டு வாங்கோ”
மாமிக்கும் என்னைப் பற்றி வடிவாகத் தெரியும். உறவு முறையில் தான் மாமியாக இருந்தாலும் நித்தியாவுக்கு இருந்த அதே உறவு தான் என்னிலும் அவருக்கு இருந்தது.
திருப்பி எதுவும் பேசவில்லை விறு விறேன்று படிகளில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். கண்களில் முட்டிப் போய் இருந்த கண்ணீரைத் துடைத்து விட்டு திரும்பிப் பார்த்தேன் அவரது பார்வை மட்டத்துக்கு கீழ் இறங்கியிருந்தேன்.
இருக்க மனமில்லை ஒரு வட்டமடித்துக் கொண்டிருக்கையில் பல நிமிடங்கள் கடந்திருந்தது. நெஞ்சின் பட படப்பு குறையவே இல்லை.
பொக்கெட்டில் இருந்த போன் சிணுங்க ஆரம்பிக்கவே கையில் எடுத்தால் மறுமுனையில் மாமி…
”வாங்கோ தம்பி அறைக்கு கொண்டு வந்திட்டினம்”
”நித்தியா…… ”
அவர் சின்ன நக்கல் சிரிப்புடன்.
”அப்பாவானவர் பிள்ளை என்ணெ்டு கேப்பமெண்டில்லை சரி வாங்கோ வாங்கோ உங்களைத் தான் தேடுறாள்”
அவர் இதைச் சொல்லி போன் நிறுத்தும் போதே நான் வாசலுக்குள் நுழைந்திருந்தேன்.
நித்தியா களைத்து முகம் எல்லாம் வாடிப் போய் படுத்திருந்தாள். தூரத்தில் பார்க்கும் போதே போகும் போது தலைக்கு கட்டப்பட்டிருந்த துணி இல்லை என்பதைக் கண்டு கொண்டேன். குடும்பி முடியப்பட்டிருந்தது. அதே அவள் பட்ட வேதனைக்கு எனக்கு சாட்சியமாக்க போதுமானதாக இருந்தது.
ஓடிப் போய் அவள் கன்னங்களில் தான் கையை வைத்துக் கொண்டேன். தன் கையால் கன்னத்தோடு சேர்த்து அழுத்தி அணைத்துக் கொண்டு மறு கையால் என் கலங்கியிருந்த கண்களை துடைத்துக் கொண்டு முகத்தை குழந்தை பக்கம் திருப்பினாள்.
அப்போது தான் நான் அப்பாவாகியிருக்கிறேன் என்ற நினைவே எனக்கு வந்தது. அந்த பிஞ்சு விரல்களுக்கு அருகே என் விரல்களைக் கொண்டு போனேன். இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாயை சுளித்துக் கொண்டிருந்தது அந்த அழகுப் பதுமை.
”பார் அவளை இந்தப் பாடு படுத்திப் போட்டு அப்பரைக் கண்டதும் அவற்ற கையை பிடிச்சிட்டான்”
அட எனக்கு பொடியன் பிறந்திருக்கிறானா? என் படப்படப்பில் இதெல்லாம் சிந்திக்க நித்தியா விடவில்லையே… சொன்ன மாமியை நிமிர்ந்து பார்த்தேன் அவரது கண்ணும் கலங்கியிருந்தது. என்னிடம் மகளைக் கொடுக்க தயங்கியதை நினைத்தாரோ தெரியவில்லை.
அறையை விட்டு மெதுவாக வெளியேறிக் கொண்டார். எம் சுதந்திரத்தைக் கெடுக்க கூடாது என்று தான் போகிறரோ அல்லது வெளியே போய்த் தான் அழப் போகிறாரோ எனத் தெரியாது ஆனால் போனார்…
”டேய் உன்னை ஏமாத்திட்டனா?”
”இல்லை”
”ஏன் உனக்கு பொம்பிளைப்பிள்ளை தானே வேணும் என்று என்னோட சண்டை பிடிப்பாய்”
”எனக்கு இரண்டாவது பிள்ளை பொடியன் தான் வேணும் என்றும் சொல்லுறனான் மறந்திட்டியா”
அவள் கேள்விக்கு முரண் பதிலால் ஒரு பார்வை பார்த்தாள். குனிந்து அவள் அழகிய நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டேன்.

இப்போது விளங்கியிருக்க வேண்டும் என் பிடரி முடியைக் கோதி தன் நெற்றியால் ஒரு தடவை முட்டி விட்டுக் கொண்டாள்.

12:19 - By mathi sutha 4

இங்குள்ள ஆக்கங்கள் அனைத்தும் எனது சொந்தப் பதிவுகளே. பயன்படுத்துவோர் அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும்

Total Pageviews

என் குறும்படங்கள்


About Me

My Photo
நான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை

பதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்

back to top